×

கர்னல் சோபியா குரேஷி குறித்த சர்ச்சை பேச்சு பாஜ அமைச்சர் குன்வர் விஜய் ஷா மன்னிப்பை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்: சிறப்பு விசாரணை குழு அமைத்து உத்தரவு

புதுடெல்லி: காஷ்மீர் மாநிலம் ஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும், ஆப்ரேஷன் சிந்தூர் குறித்தும் இந்திய அரசு தரப்பில் நாட்டுமக்களுக்கு விளக்கமளித்தவர்களில் ஒருவர் கர்னல் சோபியா குரேஷி ஆவார். இந்நிலையில் மத்தியப்பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கர்னல் சோபியா குரேஷியை \”பயங்கரவாதிகளின் சகோதரி \” என்று அம்மாநில பாஜக அமைச்சர் குன்வர் விஜய் ஷா தெரிவித்திருந்த கருத்து மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த விவகாரத்தை மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து எப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிட்டது.

இதை எதிர்த்து குன்வர் விஜய் ஷா தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் என்.கே.சிங் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சூர்யகாந்த், ”மிக மோசமான முறையில் பேசி விட்டு தற்போது மன்னிப்பு கேட்பதை கண்டிப்பாக ஏற்க முடியாது. மன்னிப்பு கேட்பதற்கே அருகதை இல்லாத அளவுக்கு அமைச்சர் பேசி உள்ளார். ஒரு ராணுவ அதிகாரி குறித்து மிக மோசமாக பேசிவிட்டு தற்போது மன்னிப்பு என்றால், அதனை எப்படி ஏற்க முடியும். நாங்கள் அதனை முழுமையாக நிராகரிக்கிறோம். இந்த செயல் என்பது வழக்கில் இருந்து விடுபடவே நீங்கள் நடத்தும் நாடகமாக உச்ச நீதிமன்றம் கருதுகிறது. பொது வாழ்க்கையில் உள்ள ஒரு அமைச்சர் இப்படியா பேசுவது. அமைச்சரின் தரம் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டுமே தவிர, இதுபோன்று கீழ்த்தரமான முறையில் இருக்கக் கூடாது என்று கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ”கர்னல் சோபியா குரேஷி குறித்து பேசியதற்கு அமைச்சர் குன்வர் விஜய் ஷா வழக்கை சந்தித்தே ஆக வேண்டும். விரிவாக ஆய்வு செய்து விசாரணை நடத்த மூன்று பேர்கள் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை அமைக்கிறோம். அதில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஜி, ஏ.டி.ஜி.பி மட்டத்திலான மூன்று அதிகாரிகள் இருப்பார்கள். விசாரணை அறிக்கையை வரும் 28ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இருப்பினும் இந்த விவகாரத்தில் அமைச்சரை தற்போது கைது செய்ய மட்டும் தடை விதிக்கிறோம் என்று கூறியுள்ளனர்.

The post கர்னல் சோபியா குரேஷி குறித்த சர்ச்சை பேச்சு பாஜ அமைச்சர் குன்வர் விஜய் ஷா மன்னிப்பை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்: சிறப்பு விசாரணை குழு அமைத்து உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,BJP ,Minister ,Kunwar Vijay Shah ,Colonel ,Sophia Qureshi ,New Delhi ,Indian government ,Halgam ,Kashmir ,Operation Sindoor ,Colonel… ,Dinakaran ,
× RELATED பறக்கும் விமானத்தில் மயங்கி விழுந்த...