×

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஓய்வு: பி.ஆர்.கவாய் இன்று பொறுப்பேற்பு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா நேற்று ஓய்வு பெற்றார். புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர் கவாய் இன்று பொறுப்பேற்கிறார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா 2024ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி பதவி ஏற்றார். அவரது பதவிக்காலம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. பிரிவுபசார விழாவில் பேசிய சஞ்சீவ் கண்ணா,’ ஓய்வுக்கு பிறகு வேறு எந்த பதவியையும் ஏற்கப்போவது இல்லை. சட்டம் தொடர்பான பணிகளில் ஈடுபடுவேன்’ என்றார். சஞ்சீவ் கண்ணா ஓய்வு பெற்றதை தொடர்ந்து, இந்தியாவின் 52ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாயை நியமித்து ஜனாதிபதி முர்மு ஏப்.29 ஆம் தேதி உத்தரவிட்டார்.

இதையடுத்து புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் இன்று பதவி ஏற்க உள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். 2019 மே 24ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட பி.ஆர். கவாய், புத்த மதத்தை சேர்ந்தவர். இந்த ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனுக்கு(2007-2010) பிறகு இந்தியாவின் தலைமை நீதிபதி பதவியில் அமரும் 2வது தலித் நீதிபதி ஆவார்.

* நீதித்துறையில் உண்மைக்கு தட்டுப்பாடு
பிரிவு உபச்சார விழாவில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பேசுகையில்,’ என்னைத் தொந்தரவு செய்யும் ஒன்றைப் பற்றி நான் பேச விரும்புகிறேன். எங்கள் தொழிலில் உண்மை பற்றாக்குறை. எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு நீதிபதியாக உண்மையைத் தேட வேண்டும். மகாத்மா காந்தி உண்மையே கடவுள் என்றும், அதற்காக பாடுபடுவதற்கான ஒரு இலட்சியம் என்றும் நம்பினார். இருப்பினும், உண்மைகளை மறைத்தல் மற்றும் வேண்டுமென்றே தவறாகக் கூறுதல் போன்ற வழக்குகளை நாம் சந்திக்கிறோம். நான் நம்புகிறேன், இது ஆதாரங்களில் சில திணிப்புகள் செய்யப்படாவிட்டால் ஒரு வழக்கு வெற்றிபெறாது என்ற தவறான நம்பிக்கையிலிருந்து உருவாகிறது. இந்த மனநிலை தவறானது மட்டுமல்ல, அது வேலை செய்யாது. இது நீதிமன்றத்தின் பணியை கடினமாக்குகிறது’ என்றார்.

The post உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஓய்வு: பி.ஆர்.கவாய் இன்று பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Chief Justice ,Sanjiv Khanna ,P.R. Kawai ,New Delhi ,Dinakaran ,
× RELATED பலாத்கார வழக்கு: நீதிமன்றத்தின் மீதான...