×

உச்ச நீதிமன்றத்தால் குஜராத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அமித்ஷா உள்துறை அமைச்சராக இருப்பதுதான் விந்தையானது: சரத்பவார் கடும் தாக்குதல்

சம்பாஜிநகர்: உச்ச நீதிமன்றத்தால் குஜராத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர் உள்துறை அமைச்சராக இருப்பதுதான் விந்தையானது என்று சரத்பவார் ஆவேசமாக தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க ஜூலை21ம் தேதி புனேயில் நடந்த பா.ஜ மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசியவாத காங்கிரஸ் கட்சி(சரத்சந்திரபவார்) பிரிவு தலைவர் சரத்பவாரை கடுமையாக விமர்சனம் செய்தார்.

அமித்ஷா கூறுகையில்,’எதிர்க்கட்சியினர் ஊழல் குறித்து பேசுகிறார்கள். இந்திய அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய ஊழல் மன்னன், ஊழல்வாதிகளின் தலைவன் சரத் பவார் தான். இதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. இப்போது அவர்கள் எங்களை என்ன குற்றம்சாட்டுவார்கள்? யாராவது ஒருவர் ஊழலை நிறுவனமயமாக்கி இருந்தால் அதுவும் சரத் பவார் தான்’ என்று அமித்ஷா பேசியிருந்தார். இதனால் ஆவேசம் அடைந்த சரத்பவார் நேற்று பதிலடி கொடுத்தார்.

இதுதொடர்பாக சரத் பவார் கூறுகையில்,’ சில நாட்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர் அமித் ஷா சில விஷயங்களைக் கூறி என் மீது தாக்குதல் தொடுத்திருந்தார். நாட்டிலுள்ள ஊழல்வாதிகளுக்கு எல்லாம் தலைவன் என்று என்னை அழைத்திருந்தார். இதில் விநோதமான விஷயம் என்னவென்றால், உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷா குஜராத்தில் சட்டத்தை தவறாக பயன்படுத்தியதற்காக அந்த மாநிலத்தில் இருந்து வெளியேறும்படி உச்ச நீதிமன்றத்தால் நிர்பந்திக்கப்பட்டார். சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியதால், உச்ச நீதிமன்றத்தால் குஜராத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒருவர் இப்போது இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருப்பது விந்தையானதுதான் என்று தெரிவித்துள்ளார்.

* நேரு, படேல் தலைமைத்துவம்
சரத்பவார் பேசுகையில்,’ நவீன இந்தியா பற்றிய நேருவின் தொலைநோக்கு நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் அவசியமானது. நாட்டை உலகின் மைய மேடையில் கொண்டு செல்லும் தொலைநோக்கு அவருக்கு இருந்தது. அவரது தலைமைத்துவம் பிரிவினைக்குப் பிறகு நாட்டை ஒற்றுமையாக வைத்திருக்க இது தேவைப்பட்டது. நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் திறமையான நிர்வாகியாகவும், விவசாயிகள் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்காகவும் பணியாற்றினார். சுதந்திரத்திற்குப் பிந்தைய நாட்டை ஒன்றிணைப்பதில் படேலின் பங்களிப்பு மகத்தானது. மகாத்மா காந்தி இரு தலைவர்களின் (நேரு மற்றும் படேல்) திறன்களையும் அவர்களின் தலைமைப் பண்புகளையும் அறிந்திருந்தார்’ என்று கூறினார்.

The post உச்ச நீதிமன்றத்தால் குஜராத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அமித்ஷா உள்துறை அமைச்சராக இருப்பதுதான் விந்தையானது: சரத்பவார் கடும் தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Amit Shah ,Gujarat ,Supreme Court ,Sharad Pawar ,Sambhajinagar ,Home Minister ,Maharashtra ,BJP ,Pune ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…