தஞ்சாவூர்: மாணவியுடன் பேசியதற்காக ஆசிரியர் அவமானப்படுத்தியதால் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் மாதாகோட்டை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். பேட்டரி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மணிமேகலை. இவர்களின் ஒரே மகன் ராம் (16), தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் தனது அறையில் ராம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து தஞ்சாவூர் போலீசார் விசாரணை நடத்தி, மாணவன் எழுதியிருந்த கடிதத்தை கைப்பற்றினர்.
அதில், பள்ளி வகுப்பறையில் தோழியான சக மாணவியுடன் பேசிக்கொண்டு இருந்ததை பார்த்த 11ம் வகுப்பு ஆசிரியர் சிம்காஸ் தவறாக புரிந்து கொண்டு தரக்குறைவாக பேசியதாகவும், மற்ற மாணவர்கள் முன் அவமானப்படுத்தும் விதமாக பேசியதாகவும், அதனால் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் எழுதியிருந்தார். இதையடுத்து பள்ளியை பெற்றோர்களும் உறவினர்களும் முற்றுகையிட்டு, ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனர். இதையடுத்து போலீசார் ஆசிரியர் சிம்காசை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
The post மாணவியுடன் பேசியதற்காக ஆசிரியர் அவமானப்படுத்தியதால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது appeared first on Dinakaran.
