×
Saravana Stores

தஞ்சை, ஓசூரில் விமான நிலையம் கொண்டு வர நடவடிக்கை: அமைச்சர் டிஆர்பி ராஜா பேட்டி

தஞ்சாவூர்: தஞ்சை, ஓசூர், தென் மாவட்டங்களில் விமான நிலையம் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார். தஞ்சாவூர் மேலவஸ்தாசாவடியில் கட்டப்பட்டு வரும் டைடல் பூங்கா கட்டுமான பணியை தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: கடந்த 3 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட டைடல் பூங்கா கட்டுமான பணி இப்போது முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த டைல் பூங்காவில் வெகு விரைவில் மிகப்பெரும் நிறுவனங்கள் வரவுள்ளன.

டெல்டா பகுதியில் படித்த இளைஞர்கள், தொழில் முனைவோர்கள் இங்கேயே தொழில் தொடங்குவதற்கு ஸ்டார்ட் அப் மையமாக இப்பூங்கா அமையும். குறிப்பாக, இப்பூங்கா தஞ்சாவூர் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும். டெல்டா மாவட்டங்களில் எந்த காலத்திலும் விவசாயிகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக தொழில்கள் வராது. அதே சமயம், இங்கு விவசாயம் சார்ந்த தொழில்பேட்டைகள் நிச்சயமாக கொண்டு வரப்படும்.

படித்த இளைஞர்களுக்கு அடுத்த கட்ட வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதில், தமிழக முதலமைச்சர் முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறார். எனவே, டெல்டா பகுதியில் எந்தவித சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுத்தாத தொழில்பேட்டைகளை கொண்டு வரும் பணி நடைபெறுகிறது. ஓசூர், தென் மாவட்டங்களில் விமான நிலையம் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதே போல தஞ்சாவூரிலும் விமான நிலையம் அமைப்பதற்கான முதல் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

The post தஞ்சை, ஓசூரில் விமான நிலையம் கொண்டு வர நடவடிக்கை: அமைச்சர் டிஆர்பி ராஜா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Minister TRP ,Raja ,Tanjore ,Hosur ,Southern ,Tanjore, ,Minister DRP ,
× RELATED தஞ்சாவூர் டைடல் நியோ பூங்காவில் நிறுவனங்களின் தொடக்கவிழா