தமிழ்நாட்டிற்குப் பெருமைத் தேடித்தந்த அறிஞர் பெருமக்கள், சமூகநீதி, விடுதலை உணர்வுகளை ஊட்டிவளர்த்த கவிஞர்கள், இசை மேதைகள், தமிழ்நாட்டின் தியாக வரலாற்றுக்கு உன்னத சாட்சியங்களாக விளங்கும் தியாகிகள், மேதைகள் மற்றும் அறிஞர்களின் நினைவுகளைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையிலும், தமிழ் சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையிலும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நினைவகங்கள், திருவுருவச் சிலைகள், அரங்கங்கள், நினைவுத் தூண்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு, சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
அஞ்சலை அம்மாள், சிறுவயது முதல் சுதந்திரப் பற்று மிக்கவராக திகழ்ந்தார். 1921 ஆம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கிய போது அதில் கலந்து கொண்டு அஞ்சலை அம்மாள் தமது பொது வாழ்க்கையை தொடங்கினார். சென்னையில் நடைபெற்ற ஆங்கிலேய படைத் தளபதி ஜேம்ஸ் நீல் சிலை அகற்றும் போராட்டம், கடலூரில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகம் மற்றும் அந்நிய ஆடை எதிர்ப்பு போராட்டம், 1940ம் ஆண்டு நடைபெற்ற தனிநபர் சத்தியாகிரக போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றதற்காக சிறை தண்டனை பெற்றார்.
அஞ்சலையம்மாள் விடுதலைப் போராட்டத்திற்காக தனது குடும்பச் சொத்துக்களையும், குடியிருந்த வீட்டையும் விற்று, நாட்டிற்காக தியாகம் செய்தார். “தென்னாட்டின் ஜான்சி ராணி” என்று காந்தியடிகளால் அழைக்கப்பட்ட அஞ்சலையம்மாள் , மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றியவர்.
இத்தகைய சிறப்புமிக்க சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாளின் நினைவைப் போற்றுகின்ற வகையில், 2021-22ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறை மானியக் கோரிக்கையில், இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி, ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றத் தென்னிந்தியாவின் முதல் பெண்மணி, காந்தியடிகளால் தென்னிந்தியாவின் ஜான்சிராணி என்று அழைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளுக்கு கடலூரில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, கடலூர் மாநகராட்சி, காந்தி பூங்காவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் திருவுருவச் சிலையை முதலமைச்சர் நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலகத்திலிருந்து, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன், மாநில திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவர் நாகநாதன், சட்டமன்ற உறுப்பினர் எழிலன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மோகன், மற்றும் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
The post கடலூரில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் உருவ சிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.