நியமனம், பதவி உயர்வு அடிப்படையில் மாநில முன்னுரிமை தேவை நிர்ணயம்: தொடக்க கல்வி ஆசிரியர்கள் கோரிக்கை

சென்னை: தொடக்கக் கல்வித்துறையில் தற்போது அனைத்து நியமனங்களும் மாநில அளவில் நடப்பதால், அனைவருக்கும் மாநில முன்னுரிமை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு அவர்கள் பதவி உயர்வு பெற்ற தேதியை அடிப்படையாகக் கொண்டு மாநில அளவில் முன்னுரிமை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தொடக்கக் கல்வித்துறையில் சார்நிலைப் பணிகள் சிறப்பு விதிகளில் விதி 9ன்படி ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியமும் ஒரு அலகு என உள்ளதை மாவட்ட முன்னுரிமை அல்லது மாநில முன்னுரிமை என மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்து உரிய பரிந்துரை அரசுக்கு அளிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்த குழுவில் பள்ளிக்கல்வி இயக்குநர் தலைவராகவும், தொடக்க கல்வி இயக்குநர், பள்ளிக் கல்வித்துறை பணியாளர் தொகுதி இணை இயக்குநர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மெண்ட், தொடக்க கல்வி இயக்குநருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு தொடக்க கல்வி சார்நிலைப் பணிவிதிகள் 1983ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அது அந்த காலகட்டத்துக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது. அது காலத்துக்கு ஏற்ற வகையில் பொருந்தவில்லை. இதனால் இளையோர், மூத்தோர் ஊதிய முரண்பாடு, பதவி உயர்வு, இடமாறுதல் போன்றவற்றில் இந்த அரசாணைகளை பின்பற்றுவதால் ஆயிரக்கணக்கில் நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் இந்த வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருவதால் ஊதியம் நிர்ணயம் செய்வதில் அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டு வருகிறது.

இதற்கு பிறகு பல வகைகளில் விதிகளில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு ஆசிரியர் நியமனத்துக்கு மாநில அளவிலான தகுதித் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டு அதன் மூலமாகவே பணி நியமனங்கள் செய்யப்படுகின்றன. தற்போது தொடக்க கல்வித்துறையில் எந்த நிலையிலும் ஊராட்சி ஒன்றிய அளவில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் நடப்பதில்லை. தற்போதைய நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்று உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் வலியுறுத்தியதின் அடிப்படையில் தொடக்க கல்வியில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் அனைத்தும் போட்டித் தேர்வின் அடிப்படையில் நடக்கிறது. இந்நிலையில் தொடக்க கல்வித்துறையில் 1981ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ஒன்றிய அளவிலான முன்னுரிமை என்பது காலத்துக்கு எந்த வகையிலும் பொருந்தாது.

தொடக்க கல்வித்துறையில் தற்போது அனைத்து நியமனங்களும் மாநில அளவில் நடப்பதால் அனைவருக்கும் மாநில முன்னுரிமை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு அவர்கள் பதவி உயர்வு பெற்ற தேதியை அடிப்படையாக கொண்டு மாநில அளவில் முன்னுரிமை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைவதற்கும் தொடக்க கல்வித்துறையில் மாநில அளவில் முன்னுரிமை என்பது சரியாக இருக்கும். ஒரு ஒன்றியத்தில் இருந்து மற்றொரு ஒன்றியத்துக்கு பணி மாறுதலில் செல்பவர்கள் அங்கு குறைவான ஊதியம் பெறும் நிலை உள்ளது. அதை மாற்றி அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post நியமனம், பதவி உயர்வு அடிப்படையில் மாநில முன்னுரிமை தேவை நிர்ணயம்: தொடக்க கல்வி ஆசிரியர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: