ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலையில் 3 நாள் தங்கி விழா நடத்த எவ்வாறு அனுமதிக்க முடியும்?: ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலையில் 3 நாள் தங்கி விழா நடத்த எவ்வாறு அனுமதிக்க முடியும்? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. விருதுநகரைச் சேர்ந்த சடையாண்டி என்பவர் நவராத்திரி விழாவில் 11 நாட்களும் சதுரகிரியில் சுவாமி தரிசனம் செய்யவும், கடைசி 3 நாட்கள் கோயிலில் இரவில் தங்கவும், பாரம்பரிய முறைப்படி அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபாடு நடத்த வேண்டும் என்பன உட்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அந்த வழக்கு இன்று நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மலையில் உள்ள வனம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை தரப்பு தெரிவித்தது. இரவு நேரங்களில் காட்டுத்தீ அல்லது காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டால் அசம்பாவிதம் ஏற்பட்டு விடும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி புகழேந்தி ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலையில் 3 நாள் தங்கி விழா நடத்த எவ்வாறு அனுமதிக்க முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி புலிகள் காப்பகமாக உள்ள நிலையில் 3 நாட்கள் விழா நடத்த எவ்வாறு அனுமதிக்க முடியும்? என்றும், 3 நாள் தங்கி வழிபட அனுமதி அளித்து ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது?. அரசு பொறுப்பேற்க முடியுமா அல்லது நீதிமன்ற பொறுப்பேற்க முடியுமா என்றும் மனுதாரருக்கு நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். ஒருநாள் தங்கி வழிபட அனுமதி தர முடியுமா என்பது பற்றி அறநிலையத்துறை பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை ஆணையிட்டு, சடையாண்டி என்பவர் தாக்கல் செய்த மனுவை நாளை ஒத்திவைத்தது.

The post ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலையில் 3 நாள் தங்கி விழா நடத்த எவ்வாறு அனுமதிக்க முடியும்?: ஐகோர்ட் கிளை கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: