திண்டுக்கல்லில் சீனிவாச பெருமாள் கோயில் ஆனி திருவிழா கொடியேற்றம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உள்ள சீனிவாச பெருமாள் கோயிலில் ஆனி பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் மிகவும் பழமையான சீனிவாச பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆனி பெருந்திருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக அதிகாலை மூலவருக்கு திருமஞ்சனமும், 10.30 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு பூஜை, கலசபூஜை ஆகியவற்றை தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது.

இதன்பிறகு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் நடைபெற்றது. பின்னர் இரவு 7 மணிக்கு அன்ன வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்ச்சியில் நகரின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஆனி திருவிழா 13 நாட்கள் நடைபெறும் நிலையில், வரும் 23ம் தேதி திருக்கல்யாண வைபவம், 25ல் திருத்தேரோட்டம், 27ம் தேதி தெப்ப உற்சவம் ஆகியவை நடக்கிறது. இதையடுத்து ஜூன் 28ல் ஊஞ்சல் உற்சவத்துடன் திருவிழா நிறைவடைகிறது.

The post திண்டுக்கல்லில் சீனிவாச பெருமாள் கோயில் ஆனி திருவிழா கொடியேற்றம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: