பூந்தமல்லி அருகே காசி விஸ்வநாதர் கோயிலில் திருக்கல்யாண வைபவம்


பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே மிகப் பழமையான விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் வைகாசி பிரமோற்சவ விழாவை முன்னிட்டு, நேற்றிரவு காசி விஸ்வநாதர் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் வரலாற்று சிறப்புமிக்க மிகப் பழமையான விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் இந்த ஆண்டு கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் வைகாசி பிரமோற்சவ விழா நிகழ்ச்சிகள் துவங்கி நடைபெற்று வந்தன. இதைத் தொடர்ந்து, நாள்தோறும் மூஷிக வாகனத்தில் விநாயகர் திருவீதியுலா, பஞ்சமூர்த்தி திருவீதியுலா, சந்திரசேகரர் ரிஷப வாகனம், நாக வாகனம், அதிகார நந்தி சேவை, விநாயகர், சோமாஸ்கந்தர், விசாலாட்சி அம்மன் திருவீதியுலா என பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.

பல்வேறு வாகனங்களில் தம்பதி சமேதராக சர்வ அலங்காரங்களுடன் உற்சவர் காசி விஸ்வநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத் தொடர்ந்து, நேற்று காலை நடராஜர் அபிஷேகமும் திருவீதியுலாவும் நடைபெற்றது. மதியம் சந்திரசேகரர் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், நேற்றிரவு விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் சுவாமியின் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சியும் விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின்போது இடியுடன் கோடை மழை கொட்டியது. மழையில் நனைந்தவாறே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கல்யாண வைபவத்தை கண்டு தரிசித்தனர். திருக்கல்யாண நிகழ்வில் மழை பெய்து குளிர்வித்தது பக்தர்களிடையே பரவசத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. இதையடுத்து இன்று விடையாற்றி உற்சவமும், விநாயகர் சோமாஸ்கந்தர், விசாலாட்சி திருவீதியுலா, நாளை உற்சவர் சாந்தி அபிஷேகம், ஆஸ்தானம் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சிகளில் பூந்தமல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், விழா குழுவினர் மற்றும் ஊர்மக்கள் சிறப்பாக செய்திருந்தனர். இங்கு பாதுகாப்பு பணிகளில் போலீசார் ஈடுபட்டனர்.

The post பூந்தமல்லி அருகே காசி விஸ்வநாதர் கோயிலில் திருக்கல்யாண வைபவம் appeared first on Dinakaran.

Related Stories: