இலங்கை தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில் கைதான 7 பேருக்கு நீதிமன்ற காவல் விதித்து நீதிபதிகள் உத்தரவு..!!

சென்னை: இலங்கை தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில் கைதான 7 பேருக்கு நீதிமன்ற காவல் விதித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்தவர் தொழிலதிபர் முகமது ஷாம். இவர் பீடி, கொட்டை பாக்கு ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 10ம் தேதி இலங்கையில் இருந்து விமானம் மூலம் வந்த அவரை சென்னை மண்ணடியில் வைத்து மர்ம நபர்கள் கடத்தி சென்றனர். தொடர்ந்து தொழிலதிபர் முகமது ஷாமின் மகள் தனது தந்தையை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது அவரது செல்போனில் பேசிய அடையாளம் தெரியாத நபர், உன் தந்தையை கடத்திவிட்டதாகவும், 15 லட்சம் பணம் கொடுத்து விட்டு தந்தையை மீட்டு செல் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த முகமது ஷாமின் மகள், உடனே இணையதளத்தில் தேடி வடக்கு கடற்கரை காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு நடந்தவற்றை தெரிவித்தார். அத்துடன் மெயில் மூலம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. அந்த புகாரின் அடிப்படையில் உதவி ஆணையர் வீரகுமார் தலைமையில் தீவிரமாக தேடப்பட்டு நேற்று அரும்பாக்கம் பகுதியில் தொழிலதிபரை போலீசார் பத்திரமாக மீட்டனர்.

மேலும் கடத்தல்காரர்களை 12 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். கடத்தலில் ஈடுபட்டது அண்ணா நகரை சேர்ந்த சித்ரா, தினேஷ் மற்றும் வேலு உள்ளிட்ட 4 பேர் என்பது தெரியவந்தது. இன்றைய தினமும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மொத்தமாக 7 பேரையும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த ஜார்ஜ் டவுன் நீதிமன்ற மாஜிஸ்திரேட், கடத்தல் வழக்கில் கைதான 7 பேரையும் டிசம்பர் 1 வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

The post இலங்கை தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில் கைதான 7 பேருக்கு நீதிமன்ற காவல் விதித்து நீதிபதிகள் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: