செங்கல்பட்டு:மறைமலை நகரில், திமுக பொறியாளர் அணி சார்பில் நடந்த, பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி சார்பில், கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி, மறைமலைநகரில் மாநிலம் அளவிலான பொறியியல் மாணவர்களுக்கான பேச்சு போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு காஞ்சி வடக்கு மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் வினோத்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணை அமைப்பாளர்கள் கதிரவன், வரதராஜ் பெருமாள், விஜய்சங்கர், செங்குட்டுவன், பிரபாகரன், அன்புஎழில், விக்னேஷ், சாய்பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில், காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளரும், குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, தொழில்நுட்ப கல்விக்கு தோள் கொடுத்த கலைஞர் உள்பட 6 தலைப்புகளில் பொறியியல் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சு போட்டியை துவக்கி வைத்தார். பின்னர், நேற்று முன்தினம் மாலை பேச்சு போட்டியில் முதலிடம் பிடித்த கல்லூரி மாணவி உள்பட 3 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசு தொகை,பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இதேபோல் பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பதக்கம், ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பின்னர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், ‘‘இந்தியாவிலேயே உயர்கல்வி படித்த பெண்கள் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகம். பொய் செய்திகளை பரப்பி வருபவர்களுக்கு, வரும் நாடாளுமன்ற தேர்தலில் படித்த மாணவர்கள் பாடம் புகட்டி, திராவிட மாடல் ஆட்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்,’’ என்றார். இதில், வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ, மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் நரேந்திரன், மறைமலைநகர் நகரமன்ற தலைவர் சண்முகம், மாவட்ட துணை செயலாளர் மூர்த்தி, கூடுவாஞ்சேரி நகரமன்ற தலைவர் எம்கேடி.கார்த்திக், மறைமலைநகர் நகரமன்ற துணை தலைவர் சித்ரா கமலக்கண்ணன், மறைமலைநகர் 18வது வார்டு நகரமன்ற உறுப்பினர் கோமளவல்லி தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post திமுக பொறியாளர் அணி சார்பில் பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார் appeared first on Dinakaran.