×

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை கலெக்டர், எஸ்பி நேரடி ஆய்வு

*தரிசன வரிசையில் மாற்றங்கள் ஏற்படுத்த ஆலோசனை

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக கலெக்டர் மற்றும் எஸ்பி ஆகியோர் ஆய்வு நடத்தினர்.திருவண்ணாமலை அண்ணாலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வெளி மாநில பக்தர்கள் வருகை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.

அதனால், அண்ணாமலையார் கோயிலில் தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஒவ்வொரு நாளும் விழாக்கோலமாக காட்சியளிக்கிறது.மேலும், வார இறுதி நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்காக குவிகின்றனர்.

எனவே, பல மணி நேரம் திறந்தவெளி பகுதியில் தரிசன வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதோடு, வெளியூர் பக்தர்களின் வருகை அதிகரிப்பதால், தினசரி கோயிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ள உள்ளூர் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

எனவே, தினசரி கோயிலில் ஊழியர்களுடன் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் தரிசன வரிசையை முறைப்படுத்துதல் தொடர்பாக, கலெக்டர் தர்ப்பகராஜ், எஸ்பி சுதாகர் ஆகியோர் நேற்று நேரடி ஆய்வு நடத்தினர்.

ஆய்வில், டிஆர்ஓ ராம்பிரதீபன், மாநில தடகளச் சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், முன்னாள் நகராட்சி தலைவர் தரன், கோயில் அறங்காவலர் குழு தலைவர் ராஜாராம், அறங்காவலர்கள் கோமதி குணசேகரன், சினம் பெருமாள், இணை ஆணையர் பரணிதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது, அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயில், ராஜ கோபுரம் நுழைவு வாயில் மற்றும் கோயில் உள் பிரகாரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கள ஆய்வு நடத்தினர். அதைத்தொடர்ந்து, கோயில் நிர்வாக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

அப்போது, கோயிலில் விரைவாக பக்தர்கள் தரிசனம் செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.மேலும், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து, தினமும் காலை 1 மணி நேரம் மாலை 1 மணி நேரம் முன்னுரிமை தரிசனத்துக்கு அனுமதித்தல், உள்ளூர் பக்தர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தும் வாய்ப்புகள் குறித்து ஆராய்வது, தரிசன வரிசையில் மாற்றங்களை ஏற்படுத்துதல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் தொடர்பாக, அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

The post திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை கலெக்டர், எஸ்பி நேரடி ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Collector ,SP ,Tiruvannamalai Annamalaiyar Temple ,Tiruvannamalai ,Annamalaiyar Temple ,Annamalaiyar ,Temple ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்