×

சில அரசுகள் புள்ளி விவரங்களை மறைத்துவிடும் நாங்கள் அனைத்து புள்ளி விவரங்களையும் வெளிப்படையாக வைத்துள்ளோம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

சென்னை: சில அரசுகள் புள்ளி விவரங்களை மறைத்துவிடும். நாங்கள் அனைத்து புள்ளி விவரங்களையும் வெளிப்படையாக வைத்துள்ளோம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை மெட்ரோ ரயில் நிறுவன கூட்டரங்கில் நடந்த 19வது தேசிய புள்ளியியல் தின விழாவில், தரவுகளின் அடிப்படையில் சிறப்பு ஆய்வறிக்கை தயார் செய்யும் போட்டியில் மாநில மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற அலுவலர்களுக்கு துணை முதல்வர் உயதநிதி ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் புள்ளியியல் சார்ந்த பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி அளிப்பதற்காக பொருளியயல் மற்றும் புள்ளியியல் துறை – தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இடையே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. பின்னர், துணை முதல்வர் உயதநிதி ஸ்டாலின் பேசியதாவது: புள்ளியியலுடைய அருமை நிறைய பேருக்கு தெரியாமல், புரியாமல் இருந்த காலம் ஒன்று இருந்தது. மேற்கத்திய நாடுகள் புள்ளியியலுக்கு கொடுத்த முக்கியத்துவம் முன்பெல்லாம் நம்முடைய நாட்டில் கிடையாது. அவர்கள் நாட்டில் கொடுத்த முக்கியத்துவம் நம்ம நாட்டில் கொடுப்பதற்கு கொஞ்சம் காலதாமதமானது. அதுபற்றிய விழிப்புணர்வு நம்முடைய நாட்டில் கொஞ்சம் குறைவாகவே இருந்தது. ஆனால், இன்றைக்கு அந்த நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது. புள்ளியியலோட அவசியத்தை நாம் அனைவரும் இன்றைக்கு கொஞ்சம் லேட்டா புரிஞ்சுக்கிட்டாலும், புரிஞ்சுக்கிட்டுருக்கோம். திராவிட மாடல் என்று பெருமையோடு சொல்லி கொள்கிறோம், அதற்கான அடிப்படைகள் எல்லாமே இந்த புள்ளிவிவரங்களை வைத்துதான். எல்லாத்தையும் புள்ளிவிவரத்தோடு ஆதாரத்தோடு தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

புள்ளிவிவரங்களை சில அரசுகள் மறைக்கும், சில புள்ளிவிவரங்களை பொதுவெளியில் வெளியிட தயங்குவார்கள், வெளியிடமாட்டார்கள். ஏனென்றால், அந்த புள்ளிவிவரங்கள் அந்த அரசுக்கு சில சமயங்களில் சாதகமாக இருக்காது. அப்படி மறைக்கும் போது உண்மையான சமூக நிலைமை ஆராய்ச்சியாளர்களுக்கும், திட்டம் தீட்டக்கூடியவர்களுக்கும் தெரியாமல் போய் விடும். ஆனால், திராவிட மாடல் அரசை பொறுத்தவரைக்கும் எங்களுடைய திட்டங்கள் மீதும், அதன் செயல்பாடுகள் மீதும் எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அதனால் தான், எல்லா தரவுகளையும் புள்ளிவிவரங்களையும் நாங்கள் பொதுவெளியில் வைக்கிறோம். திட்டங்களில் சில இடங்களில் சரிவு இருந்தால்கூட, அதை சுட்டிக்காட்டும்போது அதை ஏற்றுக்கொண்டு சரி செய்வதற்கு தயாராக இருக்கிறோம். மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று நினைக்கும் எல்லா ஆட்சியாளர்களுக்கும் முதுகெலும்புபோல இருக்கக் கூடியது இந்த புள்ளியியல் துறை தான். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாநில திட்டக் குழுவின் செயல் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை செயலாளர், ஆணையர் ஜெயா, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் கிராந்தி குமார் பாடி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

The post சில அரசுகள் புள்ளி விவரங்களை மறைத்துவிடும் நாங்கள் அனைத்து புள்ளி விவரங்களையும் வெளிப்படையாக வைத்துள்ளோம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தகவல் appeared first on Dinakaran.

Tags : Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Chennai ,19th National Statistics Day ,Chennai Metro Rail Corporation ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்