சென்னை வெள்ளத்துக்கு தீர்வுதான் என்ன?

சென்னையை புரட்டி போட்ட மிக்ஜாம் புயல் மக்களுக்கு பெரிய பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளது. ஆளாளுக்கு அரசை குறை கூறிக் கொண்டு அரசியல் பேசிவிட்டு சென்று விடலாம், ஆனால், இதற்கு நிரந்தர தீர்வு தான் என்ன? என்று சிந்தித்து பார்த்தால், சென்னை வெள்ளத்தை தடுக்க ஆங்கிலேயர் விட்டு சென்ற அனைத்து கட்டமைப்புகளையும் மொத்தமாக சிதைத்து விட்டு நிற்கிறோம் என்பது மட்டுமே ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவலாக உள்ளது. 2015ல் ஏற்பட்ட பெரு வெள்ளம் செயற்கையாக உருவானது. ஆனால், 2023 மிக்ஜாம் புயல் வெள்ளம் இயற்கையாக பெய்தது. எப்படிப்பட்ட வெள்ளமாக இருந்தாலும் அதை தடுக்க வேண்டிய கடமை அரசுக்கு மட்டுமே இருக்கிறது என்று சொல்ல முடியாது.

அதற்காக உருவாக்கப்பட்ட இயற்கை வளங்களையும், அரசின் திட்டங்களையும் பாதுகாப்பது மக்களின் கடமை என்பதை மறுக்க முடியாது.அதற்கு பல்வேறு விஷயங்களை உதாரணமாக சொல்லலாம். அவை தான் ஆய்வுகளின் வெளியான அதிர்ச்சி தகவல்களாகவும் உள்ளது. பொதுவாக சென்னையில் ஒரு இடத்தை அளவீடு செய்யும் போது கடல் மட்டத்தில் இருந்து எவ்வளவு உயரத்தில் இருக்கிறது என்று குறிப்பிடுவார்கள். அப்படி பார்க்கும் போது, சென்னை மாநகரமானது, கடல் மட்டத்தில் இருந்து சமதளத்தில் இருக்கும் அதிர்ச்சி தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது கடல் மட்டத்துக்கு சமமாக சென்னை இருக்கிறது.

ஒரு சில இடங்கள் மட்டுமே கடல் மட்டத்தில் இருந்து 7 மீட்டர் உயரத்தில் உள்ளது. கடல் மட்டமும் பெரிய உயரம் இல்லை. இதனால் தான் வெள்ளம் வரும் போது வெளியேறும் மழைநீரை கடல்நீர் உள்வாங்குவது கடினமாக உள்ளது. கடல் சீற்றம் அதிகமாக இருந்தால் வெள்ள நீர் ரிவர்ஸ் ஆவதற்கும் வாய்ப்புகள் ஏற்படுகிறது.  ஆய்வில் அடுத்ததாக, சென்னையின் மண் வளம் களிமண் வகையை சார்ந்தது. களிமண்ணின் தன்மை, தண்ணீரை மெதுவாகவே உறிஞ்சும். வேகமாக உறிஞ்சாது, நீண்ட நேரம் பிடிக்கும். இதனால்தான் சென்னையில் வெள்ளம் வரும் போது நிலப்பரப்பு மழைநீரை வேகமாக உறிஞ்சுவதில்லை. இதுவும் வெள்ளம் வடியாததற்கு ஒரு காரணம் என்கிறது ஆய்வு முடிவு.

அப்படி என்றால் வெள்ளத் தடுப்புக்கு தீர்வு, மழைநீர் வடி கால்வாய் திட்டம் அமைப்பதுதான். சென்னையில் மொத்தம் 5,500 கி.மீ., தூரத்துக்கு சாலைகள் இருக்கிறது. இதில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டிருப்பது 2075 கி.மீ., தூரம் தான். எவ்வளவு தூரம் சாலைகள் உள்ளதோ அதே தூரத்துக்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இதை உணர்ந்து, தற்போது திமுக அரசு பொறுப்பேற்ற பின்பு மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டம் வேகப்படுத்தப்பட்டுள்ளது.  2011ல் சென்னை மாநகரம் வெறும் 226 சதுர கி.மீ.,தான் இருந்தது. இப்போது விரிவாக்கப்பட்ட பகுதிகளுடன் சேர்த்து 442 சதுர கி.மீட்டராக அதிகரித்துள்ளது.

அதாவது இருமடங்காகியுள்ளது. இதில் 985 கி.மீ., தூரத்துக்கு தான் கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் கூட ஆரம்பத்தில் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது என்பது தகவல். 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கழிவுநீர் கால்வாய்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அதை நீட்டிப்பதற்கான எந்த புதிய திட்டங்களும் இல்லாததால் இதுவும் வெள்ள காலங்களில் பெரிய அளவில் உதவவில்லை. தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பே, புறநகர் பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

ஏற்கனவே கடல் மட்டத்துக்கு, சென்னையின் நிலப்பரவு சமதளத்தில் இருப்பதால் மழைநீர் வெளியேறுவது ஒரு சவாலான விஷயமாக உள்ளது. சென்னைக்கு மட்டும் இந்த நிலை ஏன் என்று சிந்தித்து பார்த்தால், பெங்களூரு, ஐதரபாத் போன்ற நகரங்கள் கடல் மட்டத்தில் இருந்து பல நூறு அடி உயரத்தில் உள்ளது. எனவே, பெருவெள்ளம் வந்தாலும் அங்கு மழைநீர் வேகமாக வெளியேறி பெரிய பாதிப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்கிறது. ஆனால் சென்னை மாநகரமோ சமதளத்தில் இருப்பதால் வெள்ள நீர் வெளியேறுவது சவாலாக உள்ளது.

இதை உணர்ந்து தான், ஆங்கிலேயர் காலத்தில் வெள்ளம் வரும் போது மழை நீர் வெளியேறுவதற்காக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஏராளமான ஏரிகள், குளங்கள், குட்டைகளை உருவாக்கி, பாதுகாத்து வந்தனர். இதனால் சென்னையில் வெள்ளம் உருவாகாத நிலை இருந்தது. சேமிக்கப்பட்ட இந்த மழைநீரால் மரம் வளரும், அதன் மூலம் மீண்டும் மழை கிடைக்கும். ஒரு சுழற்சி முறை உருவாகியது. 1980ல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 600 நீர்நிலைகள் இருந்தது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. ஆனால், 2022 கணக்கீட்டின்படி, ஆக்கிரமிப்பாளர்களால் வெறும் 210 நீர்நிலைகளாக சுருங்கிவிட்டது.

அதற்கு காரணம், சென்னையின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகள் அசுர வளர்ச்சியடைந்தது தான். ஏராளமான ஐ.டி.பார்க்குகள், தொழிற்சாலைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. சிஎம்டிஏவும் இஷ்டத்துக்கு விதிகளை தளர்த்தி இவற்றுக்கு அனுமதி வழங்கியதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.  அதாவது, 1980ல் சென்னையின் மொத்த நிலப்பரப்பில் 47.62 சதுர கிலோ மீட்டருக்கு தான் கட்டிடங்கள் இருந்தது. ஆனால் 2010 கணக்கீட்டின்படி 402.10 சதுர கி.மீ.தூரத்துக்கு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இது நிலப்பரப்பில் 85 சதவீதம். வெறும் 15 சதவீதம்தான் நீர்நிலைகள் என ஆய்வு தெரிவிக்கிறது.

நீர்நிலைகள் வெகுவாக சுருங்கியதால் மழைநீர் வெளியேற இடமில்லாமல் தேங்குகிறது. மேலும் மற்றொரு தகவலும் நமக்கு பேரதிர்ச்சியை தருவதாக உள்ளது. அதாவது, சென்னையின் வரப்பிரசாதமாக 5000 ஹெக்டேர் சதுப்பு நிலங்கள் இருந்துள்ளது. பள்ளிக்கரனை, வேளச்சேரி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளை கூறலாம். ஆக்கிரமிப்புகளால் அது வெறும் 600 ஹெக்டேராக சுருங்கி விட்டது. மீதியுள்ள 4,400 ஹெக்டேர் சதுப்பு நிலங்கள் எங்கே போனது என்றே தெரியவில்லை. இவை கடல் மட்டத்துக்கு அருகில் இருப்பதால், ஸ்பான்ஜ் மாதிரி செயல்படுமாம். கடல் மட்டம் உயரும்போது கடல் நீரை உறிஞ்சி வைத்துக் கொள்ளும்.

கடல் மட்டம் கீழே இறங்கும் போது உறிஞ்சிய தண்ணீரை வெளியில் விடும் தன்மை கொண்டது. இப்படிப்பட்ட சதுப்பு நிலங்களை மொத்தமாக காலி செய்துவிட்டோம் என்று தான் கூற வேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள் மட்டுமல்ல, ஒன்றிய அரசும் இதை ஆக்கிரமிப்பு செய்துள்ளதுதான் பெரும் வேதனை. பறக்கு ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகம், பேஷன் டெக்னாலஜி நிறுவன அலுவலகம், காற்றாலை அலுவலகம் உள்ளிட்ட ஒன்றிய அரசின் நிறுவனங்கள்தான் இந்த நிலங்களை ஆக்கிரமித்துள்ளது. அடுத்ததாக, வடசென்னையின் கடற்கரை கழிமுக(கிரீக்) பகுதி என அழைக்கக்கூடிய எண்ணூர். இதுவும் மழைநீரை உறிஞ்சக்கூடிய பகுதி. அதிலும் ஆயிரம் ஏக்கரை எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு கொடுத்து விட்டோம்.

வடசென்னையின் மழைநீர் உறிஞ்சு பகுதியும் போச்சு…. சென்னை மாநகருக்கு இந்தியாவிலும், வெளிநாடுகளில் உள்ள நகரங்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு உள்ளது. அதாவது, கொசஸ்தலை ஆறு, அடையாறு, கூவம் ஆறு என 3 ஆறுகள் சென்னை நகருக்கு நடுவில் ஓடுவது தான். இந்த ஆறுகள் வழியாகத்தான் சென்னையின் வெள்ள நீர் வெளியேற வேண்டும். எனவேதான், ஆங்கிலேயர்கள், இந்த ஆறுகள் பெரும் பாதிப்பை உருவாக்கும் என்பதை அறிந்து இவற்றை இணைக்கும் வகையில் ஆறுகளுக்கு குறுக்காக செல்லும் வகையில் அதன் இருபுறமும் கடலில் கலக்கும் வகையில் பக்கிங்காம் கெனாலை உருவாக்கினர். அது 1806ல் உருவாக்கப்பட்டது.

ஒருபுறம்(அதாவது வடக்கு பகுதியில்)1837ல் 305 கி.மீ., தூரத்துக்கு இந்த ஆறு ஆந்திர மாநிலம் குடிவாடா பகுதி வரை கொண்டு செல்லப்பட்டது. அதன் தென்பக்கம் மரக்காணம் அருகே கடலில் கலக்குமாறு உருவாக்கப்பட்டது. இதுதவிர 22 சிறு சிறு கால்வாய்களையும் தோண்டியுள்ளனர். அந்த கால்வாய்களை எல்லாம் கழிவு நீர், பிளாஸ்டிக் மற்றும் குப்பைகள், கட்டிட கழிவுகளை கொட்டியதால் பெரிய அளவில் அடைப்புகள் ஏற்பட்டு மழைநீர் வெளியேறுவதற்கு உதவாமல் போய்விட்டது. இப்படி அனைத்து வழிகளையும் அடைத்து விட்டு வெள்ளத்தில் மிதக்கிறோம் என்ற கூச்சலிடுவதில் எந்த அர்த்தமும் கிடையாது.

ஒவ்வொருவரும் எதற்காக சென்னை மிதக்கிறது? அதற்கான காரணங்கள் என்ன? என்பதை உணர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மட்டுமே எதிர்காலத்தில் இதை விட பெரிய புயல்கள், இயற்கை பேரிடர்களின் போது பாதிப்பை குறைக்க முடியும் என்பதுதான் ஆய்வுகள் தெரிவிக்கும் அதிர்ச்சி தகவலாகும். இயற்கை கொடுத்த வரப்பிரசாதங்களையும் அழித்து விட்டோம், ஆங்கிலேயர் நமக்கு தந்த வழிமுறைகளையும் பராமரிக்காமல் விட்டு விட்டோம்.

சென்னை நகரும், கடல் மட்டமும் சமதளத்தில் இருக்கிறது. சதுப்பு நிலங்களையும் மொத்தமாக காலி செய்து விட்டோம்.. இப்படி எல்லாவற்றையும் அழித்து விட்டு சென்னையே வெள்ளத்தில் மிதக்கிறது என்றால் யார் பொறுப்பு?. எந்த அரசு வந்தாலும் திட்டங்களை தீட்டத்தான் செய்யும். நாம்தான் அதை பாதுகாக்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். தானாகவும் ஏற்பட வேண்டும். இதுதான் நிரந்தர தீர்வாகும்.

* எப்படி இருந்த கூவம் இப்படி ஆகிவிட்டது
சென்னையில் வரலாற்று சிறப்பு மிக்க பாரம்பரிய கட்டிடங்கள் இன்னும் மிளிர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதாவது, விக்டோரியா மகால், ஐகோர்ட் பில்டிங், கன்னிமாரா நூலகம் உள்ளிட்ட வராலற்று சிறப்புமிக்க பல கட்டிடங்கள் இருக்கிறது. இந்த கட்டிடங்களை 1900ல் கட்டியது ஒரு தமிழன்தான். அவர் யார் என்றால், தாட்டி கொண்டா நம்பெருமாள் செட்டி என்பவர் தான். சொந்த ரயிலும் சென்னையில் முதன் முதலாக கார் வாங்கியதும் இவர்தான் என்ற பெருமைக்குரிறியவர். இவர், தினமும் காலையில் கூவம் ஆற்றில் குளித்து விட்டுத்தான் பூஜை செய்வாராம். அப்படி இருந்த கூவம்தான் இப்போது இப்படி நாறிவிட்டது.

* இயற்கை கொடுத்த வரப்பிரசாதங்களையும் அழித்து விட்டோம்.

* ஆங்கிலேயர் நமக்கு தந்த வழிமுறைகளையும் பராமரிக்காமல் விட்டு விட்டோம்.

* சென்னை நகரும், கடல் மட்டமும் சமதளத்தில் இருக்கிறது. சதுப்பு நிலங்களையும் மொத்தமாக காலி செய்து விட்டோம்.

* இப்படி எல்லாவற்றையும் அழித்து விட்டு சென்னையே வெள்ளத்தில் மிதக்கிறது என்றால் யார் பொறுப்பு?

The post சென்னை வெள்ளத்துக்கு தீர்வுதான் என்ன? appeared first on Dinakaran.

Related Stories: