×

இளைஞர்களிடையே அதிகரித்து வரும் பக்கவாதம், மாரடைப்பு தீர்வு என்ன?

நன்றி குங்குமம் டாக்டர்

நரம்பியல் நிபுணர் நூருல் அமீன்

கொரோனாவுக்கு பின் பக்கவாதம், மாரடைப்பு போன்ற நோய்கள் இளைஞர்களை அதிக அளவில் பாதித்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றது. இது குறித்து, கிளெனீகல்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் ஆலோசகர் டாக்டர் எஸ். நூருல் அமீன் பகிர்ந்து கொண்டவை:

பக்கவாதம் என்பது ரத்த குழாய் சார்ந்த பிரச்னையாகும். இதை தடுக்க விரைவான மற்றும் புத்திசாலித்தனமான சிகிச்சை முறை தேவைப்படுகிறது. கொரோனாவிற்கு பின், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற கடுமையான ரத்த குழாய் சார்ந்த நோய்கள் அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றது. இதில் மிகவும் வருத்தப்படக் கூடிய ஒரு விஷயம் என்னவென்றால், இவை இளைஞர்கள் இடையே சமீபகாலமாக அதிக அளவில் காணப்படுவதுதான்.

இந்தியாவில் ஒரு வருடத்தில் 1 லட்சம் பேரில் 108 முதல் 172 பேருக்கு பக்கவாதம் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் பரவலானது 1 லட்சம் பேரில் 26 முதல் 757 ஆக உள்ளது. ஒரு மாத இறப்பு விகிதம் 18 சதவீதம் முதல் 42 சதவீதம் வரை உள்ளது. 19 முதல் 49 வயதுக்குட்பட்டவர்களில் 1 லட்சம் பேரில் 49 பேருக்கு அனைத்து வகையான பக்கவாதமும் ஏற்படுகிறது.

ஆனால் இதில் நம்பிக்கைக்குரிய விஷயம் என்னவென்றால், இதற்கு அளிக்கப்படும் சிகிச்சையில் 28 நாட்களில் வயதானவர்களைக் காட்டிலும் இளைஞர்கள் குணமாகும் விகிதம் சிறப்பாக உள்ளது. அதாவது 46 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, ​​60 சதவீதமாக உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 51 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களில் பக்கவாதம் ஏற்படும் பாதிப்பு அதிகபட்சமாக 34.28% ஆக உள்ளது. பக்கவாதம் ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளில் உயர் ரத்த அழுத்தம் முதன்மையாக 48.5 சதவீதமாக உள்ளது. இந்த அறிகுறிகளை கண்டறிந்து அதற்கு முறையான சிகிச்சை அளிக்காதபட்சத்தில், அது பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பக்கவாதம் என்பது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைவதால் ஏற்படும் ஒருவித நரம்பியல் பிரச்னையாகும். இதன் விளைவாக மூளை செல்கள் நிரந்தரமாக பாதிக்கப்படும். இதன் அறிகுறிகள் கண்(பார்வை) மாற்றங்கள், முக சமச்சீரற்ற தன்மை, கைகள் அல்லது கால்களின் பலவீனம், பேச்சு அல்லது உணர்ச்சிக் கோளாறுகள் போன்ற வடிவங்களில் இருக்கலாம். பக்கவாதம் இரண்டு விதங்களில் அதாவது தமனி அல்லது ரத்த நாளங்கள் சார்ந்த பிரச்னைகளால் ஏற்படலாம்.

தமனியால் ஏற்படும் பக்கவாதம் என்பது மூளைக்கு ரத்தம் வழங்கும் தமனிகளில் அடைப்பு, மூளைக்குள் ரத்தம் கசிவதால் ரத்தக் குழாயில் சிதைவு அல்லது இதயத்திலிருந்து ஒரு உறைவு மூளைக்கு வழங்கும் ரத்தக் குழாயைத் தடுப்பதன் காரணமாக ஏற்படலாம். ரத்த நாளங்கள் பிரச்னையால் ஏற்படும் பக்கவாதம் என்பது மூளையில் இருந்து ரத்தத்தை வெளியேற்றும் நரம்புகளில் அடைப்பு காரணமாக ஏற்படலாம்.

சிகிச்சை முறைகள்

பக்கவாதம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் உள்ள எந்தவொரு நோயாளியையும் புறநோயாளிகள் பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்காமல் அவரை உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும். தேவையான அடிப்படை ரத்தப் பரிசோதனைகளுக்குப் பிறகு நோயாளிக்கு சிடி அல்லது எம்ஆர்ஐ மூளை ஸ்கேன் செய்யப்பட்டு, அதைத் தொடர்ந்து இஸ்கிமிக் மற்றும் எம்போலிக் பக்கவாதத்திற்கான அறிகுறி தோன்றிய நாலரை மணி நேரத்திற்குள் த்ரோம்போலிடிக் மருந்து உடன் மறுசீரமைப்பு திசு பிளாஸ்மினோஜென் ஆக்டிவேட்டர் சிகிச்சை அளித்து ரத்தக் கட்டிகளை உடைத்து ரத்த ஓட்டத்தை சீராக்க வேண்டும்.

எந்த சிகிச்சை அளித்தால் சிறப்பான பலன் அளிக்கும் என்பதற்கு, நோயாளிக்கு அறிகுறிகள் தொடங்கிய நேரத்தைக் குறிப்பிடுவது நல்லது என்று எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது. அறிகுறி தெரிந்த நாலரை மணிநேரத்திற்கு மேல் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு மெக்கானிக்கல் த்ரோம்பெக்டோமி மூலம் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். மருத்துவ நிலைமையின் அடிப்படையில் பக்கவாத அறிகுறி தோன்றிய 6 முதல் 24 மணிநேரம் வரை இயந்திர த்ரோம்பெக்டோமி சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

IV த்ரோம்போலிசிஸ் மற்றும் மெக்கானிக்கல் த்ரோம்பெக்டோமி ஆகிய இரண்டு சிகிச்சை முறைகளும் பக்கவாத சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. இவை இரண்டும் இறப்பு மற்றும் நோயுற்ற தன்மையை வெகுவாக குறைக்கின்றன. ரத்தக்கசிவு பக்கவாதத்திற்கு பொதுவாக உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல், எடிமா எதிர்ப்பு நடவடிக்கைகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் ரத்தக்கசிவு அதிகமாக இருந்தால் உயிர் காக்கும் மூளை அறுவை சிகிச்சையான டிகம்ப்ரசிவ் கிரானிஎக்டோமி சிகிச்சையும் செய்யப்படும்.

பக்கவாதத்திற்குப் பிந்தைய பராமரிப்பு என்பது பக்கவாதம் ஏற்பட்டவர்களும், அவர்களைப் பராமரிப்பவர்களும் நன்கு அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவு, குறைந்த உப்பு உணவு, புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். மேலும் நாள்தோறும் 10 நிமிடங்கள் வீதம் வாரத்திற்கு 4 முறை உடற்பயிற்சி செய்வது நல்லது. மேலும் நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு, கெட்ட கொழுப்பு அதிகரிக்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். நரம்பியல் நிபுணர்கள், பிசியோதெரபிஸ்ட், உளவியலாளர் மற்றும் மருத்துவர் ஆகியோரைக் கொண்ட குழுவால் மட்டுமே, பக்கவாத நோயாளிகளுக்கு முழுமையான மற்றும் சிறப்பான சிகிச்சையை அளிக்க முடியும்.

பக்கவாத அறிகுறிகள்

உடலின் ஏதாவது ஒரு பகுதியில் கால், கை மற்றும் முகத்தில் மரத்துப் போதல் அல்லது சக்தி இழத்தல் மனக் குழப்பம், பேசுவதில் அல்லது புரிந்து கொள்வதில் சிரமம்.

ஒன்று அல்லது இரண்டு கண்களிலுமே பார்வை இழத்தல்

நடப்பதில் சிரமம், தள்ளாடுதல், மயக்கம் காரணமில்லாமல் பொறுக்க முடியாத அளவு அதிக தலைவலி போன்றவையாகும். இந்த அறிகுறிகள் ஆரம்பித்த மூன்று மணி நேரத்திற்குள் தகுந்த சிகிச்சை எடுத்தால், பாதிப்பை பெருமளவு குறைக்க முடியும்.

தடுக்கும் வழிமுறைகள்

ஆரோக்கியமான வாழ்க்கை முறை கண்டிப்பாக பக்கவாதம் ஏற்படுத்தும் வாய்ப்பைக் குறைக்கும்.வயது அதிகரிக்க அதிகரிக்க பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பும் அதிகரிப்பதால் கவனத்துடன் இருக்க வேண்டும்.அதிக இரத்த அழுத்தம் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. அதனால் ரத்த அழுத்தத்தை தொடர்ந்து பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

இதயம் மற்றும் ரத்த நாள நோய், சர்க்கரை நோய் மற்றும் ரத்தத்தில் அதிக கொழுப்பு இருந்தால் அதற்குத் தகுந்த சிகிச்சையைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். மனச் சோர்வு மற்றும் மன அழுத்தம் உடம்பை பெருமளவில் பாதித்து பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும். புகை பிடித்தல் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. மதுப்பழக்கம் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. அதனால் இந்த பழக்கத்தை நிறுத்துவது அவசியம்.

The post இளைஞர்களிடையே அதிகரித்து வரும் பக்கவாதம், மாரடைப்பு தீர்வு என்ன? appeared first on Dinakaran.

Tags : Kunkum ,Dr. ,Noorul Amin ,Nurul… ,
× RELATED தும்பையின் பயன்கள்!