×

உரிய சிகிச்சை உயிரைக் காக்கும்!

நன்றி குங்குமம் டாக்டர்

நோய் நாடி நோய் முதல் நாடி

பொதுநல சிறப்பு மருத்துவர் டி.எம். பிரபு

கரிசல் எழுத்தாளர். கி.ராஜநாராயணன் அவர்களை நாம் அனைவரும் இலக்கிய உலகில் கொண்டாடுகிறோம். அவரைப் பற்றி வேறொரு அறிமுகமும் இருக்கிறது, அது என்னவென்று பார்ப்போம். கி.ரா. அவரது 24 வயதில் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அந்த நேரத்தில், அவரது பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு பெண் அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறினார். அவரோ, நானே இன்றோ நாளையோ சாகப்போகிறேன்.

திருமணம் வேண்டாமென்றார். ஆனால், கி.ரா.வின் தாயாரும், அந்த பெண்ணும் ஒற்றைக் காலில் நின்று சம்மதம் வாங்கி விட்டார்கள். அவருக்கும் திருமணம் நடந்து விட்டது. அந்நேரத்தில் மருத்துவத்துறை வளர்ச்சியில் காசநோய்க்கு முறையான சிகிச்சையை மருத்துவர்களின் உதவியோடு மேற்கொண்டார். அவருக்கு நோயின் தீவிரம் குறைந்து விட்டது. கி.ரா அவர்கள் அவரது 90 வயதில் காலமானார் என்பது முக்கியமானது. அந்தளவிற்கு காசநோயின் தீவிரத்தை முறையான சிகிச்சையால் வாழ்நாளை நன்றாக வாழ முடியும் என்பதற்கு வாழ்ந்து சென்ற ஒரு முன்னோடியாக நம் முன் நிற்கிறார்.

அதுவே, சிகிச்சை எடுக்காமல், அலட்சியமாய் இருந்தால் என்னாகும் என்பதற்கு ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன். நான்கு வயதிலும், இரண்டு வயதிலும் குழந்தைகளை வைத்திருக்கும் ஒரு அம்மாவை இருமலுடன் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் அழைத்து வந்திருந்தார்கள். எத்தனை நாளாக இருமல் இருக்கிறது என்று கேட்டேன். சில மாதங்களாக இருக்கிறது என்று கூறினார். ஏன் சிகிச்சை எடுக்கவில்லை என்று கேட்டதற்கு, இருமலுடன் அவரது கணவருக்கு குளிப்பதற்கு வெந்நீர் போட, விறகு அடுப்பைத் தொடர்ந்து பயன்படுத்தி இருக்கிறார். விறகு அடுப்பில் ஏற்படும் புகையின் காரணமாக தான் இருமல் அதிகமாக இருக்கிறதோ என்று தவறாகப் புரிந்து கொண்டோம் என்று கணவர் கூறினார்.

அப்படி வரும் இருமலை கட்டுப்படுத்துவதற்காக, இருமல் மருந்து மட்டும் தொடர்ந்து குடித்துள்ளார்.அந்தப் பெண்ணை முழுமையாக பரிசோதனை செய்ததில், நுரையீரல் முழுமையாக பாதிக்கப்பட்டு, கடைசிகட்டத்திற்கு வந்து விட்டார். அவரது உயிரைக் காப்பாற்றுவது மிகவும் கடினம். இரண்டு குழந்தைகளைப் பார்க்கும் போது, என்ன சொல்வதென்று தெரியவில்லை. இப்படியாக நம் மக்கள் காசநோயைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், மிக இயல்பாக ஏற்றுக் கொண்டு, வீட்டில் இருக்கிறார்கள்.

காசநோய் என்பது, மைக்கோ பாக்டீரியம் டியூபர் குளோசிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. உலகளவில் நான்கில் ஒரு மனிதர் காசநோயின் கிருமியால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கிறது. அதாவது 25% மக்கள் காசநோயின் கிருமியால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்றால், அதில் 10% மக்கள் காசநோயால் பாதிக்கப்படுவார்கள். அதனால்தான், காசநோயினை இரு வகையாகப் பிரிக்கின்றார்கள். அதாவது மறைந்திருக்கும் காசநோய் மற்றும் செயலிலுள்ள காசநோய் என்பதாகும்.

மறைந்திருக்கும் காசநோய் என்பது மைக்கோ பாக்டீரியம் டியூபர் குளோசிஸ் உடலில் 25 % மக்களுக்கு இருக்கிறது. இவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் அவர்களின் வாழ்வியல் முறைகளால், அந்த பாக்டீரியா செயலற்றதாக மாறிவிடும். செயலிலுள்ள காசநோய் என்பது, நோயாளி காசநோயின் தீவிரத் தன்மையை அடைந்து பாதிக்கப்பட்டிருப்பார்.

யாரெல்லாம் இந்த நோயால் பாதிக்கப்படுவார்கள் என்றால், டயபடிஸ் மக்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் போதும். பெரும்பாலும் ஹச்.ஐ.வியால் பாதிக்கப்படும் போதும், பல வருடங்களாக நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அந்நேரத்தில் இவர்களுக்கு காசநோயின் தொற்று எளிதாக பரவிவிடும். மேலும் டொபாக்கோ மற்றும் ஆல்கஹால் எடுக்கும் போது, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் போது, எளிதாக தொற்றுக்கு உள்ளாவார்கள்.

மேலும், மருத்துவரின் அனுமதியின்றி மெடிக்கல் ஷாப்பில் தொடர்ந்து வலி மாத்திரைகள் எடுக்கும் போதும், ஸ்டீராய்டு மாத்திரைகளை எடுக்கும் போதும், காசநோயின் தொற்றுக்கு எளிதில் ஆளாவார்கள். ஏனென்றால், மருத்துவர்கள் ஸ்டீராய்டு மாத்திரைகளை பரிந்துரைக்கும் போது, டிபி இருக்கிறதா என்று செக் செய்து விட்டு, அதன் பிறகு தான் மாத்திரைகளைச் சாப்பிடக் கூறுவார்கள்.

உலகளவில், ஒரே ஒரு தொற்றுக் கிருமியால் அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக் கூடிய கொடிய வியாதியாக டிபி இருக்கிறது. 2020 மற்றும் 2023 வரை கொரோனாதான், மனித உயிரை பலியாக்குவதில் முதலிடத்தில் இருந்தது. அதனால் அந்த வருடத்தில் மட்டும், காசநோய் இரண்டாவது இடத்தில் இருந்தது. தற்போது, மறுபடியும், காசநோய் இன்றும் உலகளவில் முதலிடத்தில் வந்து விட்டது.

இதனை தவிர்க்க வேண்டுமானால், என்றைக்குமே எந்தவொரு வியாதியும் வருவதற்கு முன் காப்பதே சிறந்த வழி என்பது தான் சரியான முறையாகும். அதனால் டியூபர் குளோசிஸ் வருவதை தடுப்பதற்கான வழிமுறைகளைப் பாப்போம்.

1. Bacillus Calmette-Guerin (BCG) குழந்தைகளுக்கு போடப்படுகிறது. இந்த தடுப்பூசியானது, நோய் வருவதை தடுக்க முடியும். மேலும் நோய் வந்தாலும், அதன் தீவிரத்தால் ஏற்படும் பாதிப்புகளை
ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.

2.நம் வாழ்வியல் முறையில் ஆரோக்கியமான செயல்பாடுகளை தொடர்ந்து செய்ய வேண்டும்.

3. மேலும் இதுவொரு தொற்று நோயாகும். ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதாகப் பரவி விடும். அதனால் முடிந்தளவில், முதலில் நோயைக் கண்டறிந்து அதற்கான சிகிச்சையை முறையாக எடுப்பதும், அந்த சிகிச்சையின் மூலம் மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்க வேண்டும்.

4. மேலே கூறியபடி, 40% மக்கள் இந்த நோய் கிருமியால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது ஆய்வு. அதனால், கூட்டங்களில் நாம் செல்லும் போது, மாஸ்க் அணிந்து கொண்டு செல்வதும் ஒரு வகையான பாதுகாப்புக்குரியது.

காசநோய் பாக்டீரியாவை சுறுசுறுப்பான பாக்டீரியா என்றும் கூறலாம். பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் வெளிப்படுத்தும் இருமல் மற்றும் சளி போன்றவற்றால் மற்றவர்களுக்கு உடனே காற்றின் மூலம் பரவி விடுகிறது. இந்த பாக்ட்ரியா பெரும்பாலும் மனித உடலில் நுரையீரலைத் தான் 80% பாதிக்கும். மீதம் 20% மட்டுமே வயிறு, மூளை மற்ற எந்த பாகங்களில் வேண்டுமானாலும் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.

இந்த பாக்டீரியா நுரையீரலைப் பாதிக்கிறது என்றால், அதன் அறிகுறியாக பெரும்பாலும் மூன்று அல்லது நான்கு வாரத்திற்கு மேல் ஏற்படும் தொடர் இருமல், சளி மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் தொடர் காய்ச்சல் மற்றும் எடை குறைதல் ஏற்படும். இந்த அறிகுறிகள் பெரும்பாலும் காசநோய் பாதிப்பை உணர்த்துவதாக இருக்கும். அதனால் உடனே, மருத்துவரை சந்திக்க வேண்டும். நோயாளி எடுத்திருக்கும் எக்ஸ்ரே, சளி டெஸ்ட் மற்றும் பிளட் டெஸ்ட் போன்றவற்றின் மூலம், மிக எளிதாக டிபி இருப்பதை கண்டறிய முடியும். அப்படி கண்டறிந்த உடனே, மருந்துகளை குறைந்தது ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக சாப்பிட வேண்டும்.

நம் இந்தியாவைப் பொறுத்தவரை இலவசமாக அனைத்து அரசு மருத்துவமனைகளில் காசநோய்க்கு தரமான சிகிச்சை மற்றும் மருந்துகளும் கொடுக்கப்படுகிறது. மேலும், அரசு மருத்துவமனை அருகில் இல்லாதவர்கள் வசிக்கும் ஒதுக்குப்புறமான கிராமமாக இருந்தாலும், தொடர் மருந்துகளை வாங்குவதற்கு, அங்குள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் கிடைப்பதற்கு வசதிகள் இருக்கின்றன. இதனால் வறுமை நிலையில் இருப்பவர்கள் கூட, கடன் இருக்கிறது என்றும், தொலை தூரத்தில் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமென்ற பயம் மற்றும் கவலைப்படத் தேவையில்லை.

இலவச மருத்துவம் மட்டுமில்லாமல் பாதிக்கப்பட்ட அனைவர்க்கும் மருந்துகள் தொடர்ச்சியாக எளிதில் கிடைக்கக்கூடிய அளவில் நம் நாட்டில் வசதிகள் இருக்கிறது. மக்கள்தான், அதை முறையாக பயன்படுத்த வேண்டுமென்பதே மருத்துவத்துறை மக்களுக்கு வலியுறுத்துகிறது. சில நேரங்களில் ஆரம்ப சுகாதார மையத்துக்கு கூட போகமுடியாத அளவில் தொலை தூரத்தில் நோயாளி இருந்தாலும், கவலையில்லை. ஆரம்ப சுகாதார மையத்தில் பதிந்து விட்டால் போதும், அவர்கள் உங்கள் வீடு தேடி, வந்து மாத்திரைகளை கொடுப்பார்கள்.

அரசு மருத்துவர்கள் அவர்களிடம் வரும் நோயாளிகளைப் பற்றிய தகவல்களை பதிந்து விடுவதால், அவர்களுக்கு முறையான சிகிச்சைகள் கிடைப்பதை உறுதிசெய்ய முடிகிறது. மேலும், அரசு மருத்துவமனை மட்டுமில்லாது, தனியார் மருத்துவர்களும், தங்களிடம் சிகிச்சைக்கு வரும் டிபி நோயாளிகளின் சிகிச்சை முறைகள் பற்றி, அரசுக்கு தொடர்ந்து தகவல் கொடுத்து விடுகிறார்கள். அதனால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுப்பவர்களுக்கும், தரமான சிகிச்சை கிடைக்கிறது.

இங்கு மருத்துவத்துறைக்கு எந்த விஷயம் சவாலாக இருக்கிறது என்றால், சாதாரண காய்ச்சல், சளி என்றாலே, ஒரு சில நாட்கள் மாத்திரை சாப்பிட்டதும், அடுத்து மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட மாட்டோம். அதுவொரு இயல்பான மனப்பாங்காக நம் அனைவருக்கும் இருக்கிறது. அதேபோல், தொடர்ச்சியாக ஆறு மாதத்திற்கு மேல் மாத்திரைகள் தொடர்ந்து எடுக்க கூறும்போது, முதல் ஒரு சில மாதங்களில் எடை அதிகரிப்பது, இருமல் குறைவது என்று நல்ல பலன்களை மாத்திரைகள் கொடுக்க ஆரம்பிக்கும். அதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு சில மாதங்களே மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு, அதற்கடுத்து மாத்திரைகளை எடுக்க மறுக்கிறார்கள்.

இம்மாதிரி இடையில் மாத்திரைகளை எடுக்காமல் இருக்கும் போது, மறுபடியும் காசநோய் தொற்றுக்கு ஆளாவார்கள். இதனால் மாத்திரைகளின் நோய் எதிர்ப்பு திறன் குறைந்து மற்றவர்களுக்கும் கேட்காமல் போய் விடும். மனிதர்கள் அனைவரும் சமூகப்பிராணிகள் என்பதை மறந்து விடக்கூடாது. நம்முடைய தனிப்பட்ட தொற்றுக்கு சிகிச்சை இருக்கும் போது, அதை நாம் தவிர்க்கும் போது, நம்மால் நம் சமூக மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதை மறந்து விடக் கூடாது.

நமக்கான சமூகப் பொறுப்பு இந்த நோயில் எதுவென்றால், முறையான சிகிச்சை எடுக்க வேண்டுமென்பதேயாகும். இத்தனை பலன்களையும் நம் அரசாங்கம் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கும் போது, நோயால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுத்து, மற்ற நபர்களையும் பாதுகாக்க வேண்டியது என்பது ஒவ்வொரு இந்திய குடிமகன்களும் செய்ய வேண்டிய கடமையாகும். அதுவே காசநோய் இல்லாத நாடாக நம்மால் மாற்ற முடியும்.

The post உரிய சிகிச்சை உயிரைக் காக்கும்! appeared first on Dinakaran.

Tags : SAFFRON ,DISEASE ,T. M. Lord Karizal ,Rajnarayanan ,
× RELATED 16 வயதில் ஸ்டாடர்டப் நிறுவனம்!