×

லைஃப் ஸ்டைல் வலிகள்…

நன்றி குங்குமம் டாக்டர்

சர்க்கரை நோய், இதய நோய்களை லைஃப் ஸ்டைல் நோய்கள் என்கிறது மருத்துவம். வாழ்க்கை முறை மாற்றத்தினால் நாமே வரவழைத்துக்கொண்ட நோய்கள் இவை. கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலி என உடலில் வரும் வலிகளுக்கும், வாழ்க்கை முறை மாற்றமே காரணம். மேலும், தவறான முறையில் படுத்து உறங்குவது, உடலுக்கு வசதி இல்லாத நிலையில் அமர்வது என நாமேதான் வலிகளை வரவழைத்துக்கொள்கிறோம். நம் உடலின் அசைவுகளை கவனித்து, முறைப்படுத்துவதன் மூலம், வலிகளில் இருந்து மீண்டு, ஆரோக்கியத்தோடும் இயங்க முடியும்.

லைஃப் ஸ்டைல் வலிகள்…

உறங்கும் நிலை லைஃப் ஸ்டைல் வலிகள்…

தலைக்குத் தலையணைத் தேவை இல்லை, கழுத்துக்குத்தான் தேவை. கழுத்து வலி இருப்பவர்கள், உறங்கும் நிலையையும், தலையணையையும் ஒருமுறை கண்காணித்துப் பாருங்கள். பின், கழுத்து வலி ஏன் வருகிறது என்று புரியும். தூங்கும் முன்பு, சரியான நிலை எது என்று கவனித்துப் படுக்கலாம். தூங்கிய பின், நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பது நினைவில் வராது. எனவே, தூங்கும் முன் சரியான நிலையில் உறங்கச் செல்வது நல்லது. இதனால், கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலி போன்றவற்றைத் தவிர்க்க முடியும்.வலிகளை தவிர்த்திட உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு அவசியம். மாதத்தில் மூன்று நாட்களாவது ஓய்வு எடுப்பது அவசியம்.

லைஃப் ஸ்டைல் வலிகள்…

சரியான தூங்கும் முறை

*நாம் நேராகவும், ஒரு பக்கமாகவும் படுக்கும்போது, கழுத்துக்கும் தலைக்கும் இடையிலான இடைவெளியை நிரப்புவதற்காகத்தான் தலையணையை வைத்துக்கொள்ள வேண்டும்.

*வாயுத் தொல்லை, நெஞ்சு எரிச்சல் பிரச்னை இருப்பவர்கள், குப்புறப் படுக்கக்கூடாது. வயிறு அழுத்தப்படுவதால், பிரச்னை மேலும் அதிகமாகும்.

*மிகத் தடிமனான, கடினமான தலையணையைப் பயன்படுத்தக் கூடாது. மெலிதான மற்றும் மென்மையான தலையணையே பயன்படுத்த வேண்டும்.

*கால் வலிக்காக, காலுக்கு கீழ் தலையணையை வைத்துப் படுப்பதில் தவறு இல்லை. ஆனால், எப்போதும் கால் பகுதி உயர்வாகவும், தலைப்பகுதி தாழ்வாகவும் இருக்கும்படி படுப்பது சரி அல்ல. சமநிலையில் படுப்பதே சரியானது.

*கீழே படுத்துக்கொண்டிருக்கும் போது, மேஜையிலோ கட்டிலிலோ, மேலே கால் தூக்கி வைத்தவாறு படுக்கக்கூடாது. இது ரத்த ஓட்டத்தைப் பாதிக்கும். ஒரு பக்கமாக படுத்து உறங்குவது, மல்லார்ந்துப் படுத்து உறங்குவது சரியானது.

*மிக மிருதுவான, உடலை உள்ளே அழுத்தியவாறு இருக்கும் மெத்தை மற்றும் கடினமான மெத்தையைத் தவிர்க்க வேண்டும். படுத்தாலும் உடலை உள்ளே அழுத்தாத, சற்று மென்மையான
மெத்தையில் படுப்பது சரி.

உட்காரும் நிலை லைஃப் ஸ்டைல் வலிகள்…

நாற்காலியில் அமரும் முறை

*முதுகுத் தண்டு சவ்வு, நரம்புகள், சதை ஆகியவை ஒன்றோடு ஒன்று சார்ந்தவை. எனவே, உட்காரும் நிலை தவறாக இருந்தாலோ, நீண்ட நேரம் கைகளைத் தொங்கவிட்டபடி அமர்ந்தாலோ, கைவலி வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

*முதுகு, இடுப்பு, கழுத்து ஆகியவை செங்குத்தாக (90 டிகிரி) இருப்பது போல் நேராக உட்கார வேண்டும்.

*முதுகின் கீழ்ப் பகுதி, நாற்காலியில் சாய்ந்தபடி இருக்க வேண்டும். அதேபோல, கைகளை நாற்காலியின் பிடிமானத்தின் மேல் வைத்து உட்கார வேண்டும்.

*கம்ப்யூட்டர் முன் உட்காரும் போது, கழுத்தும் கணினியின் திரையும் நேராக இருக்க வேண்டும்.

*நீண்ட தூரம் வாகனம் ஓட்டுபவர்களுக்கு, முதுகு எலும்புச் சவ்வுத் தட்டின் மேல் அதிகமான அழுத்தம் கொடுக்கப்பட்டு, முதுகு வலி வரும். வீக்கம்கூட வரலாம். முதலில் அழுத்தம் ஏற்பட்டு, பின்பு சதை இறுகி, வலி ஏற்படலாம்.

*ஒரு மணி நேரத்திற்கு மேல் பயணம் செய்த பின், இறங்குபவர் முதுகு, கை, கால், கழுத்து ஆகியவற்றை வளைத்து (Stretch) எழுந்திருப்பது நல்லது. இதனால், தசைகள் தளர்வடைந்து வலி ஏற்படாது.

அலுவலகத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும் போது, சின்னச் சின்னஅசைவுகள் மூலம் நம் உடலைப் பாதுகாக்கலாம்.

லைஃப் ஸ்டைல் வலிகள்…

உணவில் உஷார்

புரதம் மற்றும் கொழுப்பு உணவுகளை அளவாகச் சாப்பிட வேண்டும். புரோட்டீன் பவுடர் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.எப்போதும் சரிவிகித உணவையே பின்பற்றுதல் நல்லது.போதுமான அளவு, தண்ணீர் அருந்த வேண்டும்.மதுப் பழக்கமும், புகைப் பழக்கமும் எலும்புகளின் அடர்த்தியைக் குறைத்துவிடும். அதேபோல, கோலா வகை குளிர் பானங்களும் எலும்புகளின் உறுதியைக் குறைக்கும்.கால்சியம் நிறைந்த உணவுகளான கேழ்வரகு, சுண்டல், பால், முட்டை, மீன், பச்சை நிறக் காய்கறிகள் மற்றும் பழங்கள், முள்ளங்கி போன்றவற்றைச் சாப்பிடலாம்.

தொகுப்பு: ப்ரீத்தி

The post லைஃப் ஸ்டைல் வலிகள்… appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED காலமறிந்து களம் காணும் மகரம்