×

பரத் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!

நன்றி குங்குமம் டாக்டர்

2003-ம் ஆண்டு வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் பரத். அதைத்தொடர்ந்து, காதல், செல்லமே, வெயில் போன்ற திரைப்படங்கள் மூலம் பிரபலமானார். இவரது நடிப்பில் இந்த ஆண்டு வெளியான இப்படிக்கு காதல், தலைமை செயலகம் படங்களை தொடர்ந்து இந்த மாதம் பிரசாத் முருகன் இயக்கத்தில் உருவான ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ் திரைப்படம் வெளிவர உள்ளது. இதையடுத்து, கவிராஜ் இயக்கத்தில் எட்டு, விஜய் ராஜ் இயக்கத்தில் முன்னறிவான் போன்ற திரைப்படங்களையும் கைவசம் வைத்துள்ளார். ஃபிட்னெஸ் விஷயத்தில் மிகவும் ஆர்வமுள்ள பரத், தனது ஃபிட்னெஸ் ரகசியங்கள் குறித்து கூறியதாவது:

ஒர்க்கவுட்ஸ்

நான் திரைத்துறைக்கு வந்த பிறகு ஃபிட்னெஸின் அவசியத்தை உணர்ந்தேன். அதிலிருந்து தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்து வருகிறேன். ஒரு கட்டத்தில் உடற்பயிற்சி எனக்கு ஒரு வெறியாகவே மாறிவிட்டது. அந்தவகையில், தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது ஜிம்மில் ஈடுபடவில்லை என்றால், எனக்கு உடல்நிலை சரியில்லாமல் காய்ச்சல் வந்துவிட்டது போன்று உணர்வேன். எப்படி நாம் ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடுவதை கட்டாயமாக வைத்திருக்கிறோமோ அது போல, உடற்பயிற்சியும் எனக்கு ஒரு வாழ்க்கை முறையாகிவிட்டது. ஏனென்றால், உடல் வியர்க்கும் அளவுக்கு உடற்பயிற்சிகள் செய்யும்போது, ​​​​நான் நன்றாகவும் ஃபிட்டாகவும் இருப்பதாக உணர்கிறேன்.

பொதுவாக உடற்தகுதி பற்றி பொதுவான தவறான கருத்து மக்கள் மத்தியில் நிலவுகிறது. அது என்னவென்றால், உடலின் எண்பது சதவிகித ஃபிட்னெஸ் சமையலறையில் தயாரிக்கப்படும் உணவிலும், மீதம் உள்ள 20 சதவிகிதத்துக்கு உடற்பயிற்சி செய்தால் போதுமென்று நினைக்கிறார்கள். இதனால், ஒருமணிநேரம் வியர்க்க வியர்க்க உடற்பயிற்சி செய்துவிட்டு, அவர்கள் விரும்பியதைச் சாப்பிடுகிறார்கள். அதனால், மறுநாள் ஜிம்மிற்குச் செல்லும்போது, ​​அதே எடையில் அவர்கள் தொய்வடைகிறார்கள். பின்னர் அவர்கள் ஜிம்மை குற்றம் சாட்டுகிறார்கள். இது சரியான முறையல்ல, உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவு நாக்கை கட்டுப்படுத்துவதும் முக்கியமாகும்.

கிராஸ்-ட்ரெய்னிங் மற்றும் டிஆர்எக்ஸ் பயிற்சிகள் பற்றி என்னிடம் பலரும் கேட்கின்றனர், அவை சிலகாலமாகவே, இந்தியாவின் ஃபிட்னஸ் பயிற்சிகளில் முன்னணியில் உள்ளன. இப்போது அதிகமான உடற்பயிற்சிக் கூடங்கள் வெறும் ‘ஜிம்கள்’ என்பதை விட ஃபிட்னஸ் ஸ்டுடியோக்கள் என்று எப்படி அழைக்கின்றன என்பதன் மூலம் இதை நிரூபிக்க முடியும். சகிப்புத்தன்மை, சுறுசுறுப்பு மற்றும் செயல்பாட்டு பயிற்சி ஆகியவை இதில் மிகவும் குறிப்பிடத்தக்கவை.

ஜிம்மிங் தவிர, எனக்கு நடனத்திலும் ஆர்வம் அதிகம். நான் என் வாழ்நாள் முழுவதும் நடனமாடி வருகிறேன், நடனம் எனக்கு சுறுசுறுப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மைக்கு உதவியது. பொதுவாக, உடற்பயிற்சி, நடனம் இரண்டு பயிற்சிகளையும் தொடர்ந்து செய்தால், சகிப்புத்தன்மையையும் நெகிழ்வுத்தன்மையையும் இழக்க நேரிடும் என்ற கருத்து உள்ளது, ஆனால், அது சிறிதும் உண்மை இல்லை. ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராஃப் இதற்கு மிகப்பெரிய உதாரணம். உடற்பயிற்சி, நடனம் இரண்டையும் நாம் சமநிலைப் படுத்துவதைப் பொருத்து அது அமையும். எனவே, வாரத்திற்கு மூன்று முறையாவது நடனமாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்.

நடனத்தில், ஜாஸ், பாலே மற்றும் ஹிப்-ஹாப் போன்ற ஸ்டைல்களை உள்ளடக்கிய மேற்கத்திய கிளாசிக்கல் நடனங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்தவகையில், நடனமும் ஜிம்மிங்கும் என் இரு கண்கள் போல பார்க்கிறேன்.

டயட்

உணவு ஒரு நபரின் உடற்தகுதி அளவை வடிவமைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது என்றால் மிகையில்லை. எனவே, ஃபிட்னெஸ் விஷயத்தில், நாக்கை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமாகிறது. அந்தவகையில், நான் பிரியாணி, சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவற்றை எல்லாம் தவிர்த்து வெகு நாட்கள் ஆகிறது. அதேசமயம், முற்றிலும் தவிர்த்துவிட்டேன் என்று சொல்ல மாட்டேன். குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சாப்பிடுகிறேன்.

எனது தினசரி உணவுமுறை என்றால், காலை உணவாக, புரோட்டீன் நிறைந்த உணவுகள், காய்கறிகள், முட்டை மற்றும் ராகியால் ஆன உணவுகள் போன்றவற்றை எடுத்துக் கொள்கிறேன். மதிய உணவாக, பிரவுன் அரிசியில் சமைத்த சாதம், கீரை, காய்கறிகள் மற்றும் சிக்கன் எடுத்துக் கொள்கிறேன். இரவு உணவாக, சப்பாத்தி, தால் அல்லது ராஜ்மா கிரேவி எடுத்துக் கொள்வேன். இது தவிர, தூங்குவதற்கு முன்பு ஒரு கப் க்ரீன் டீ அருந்துவேன். இவையே எனது தினசரி உணவு வழக்கம்.

பொதுவாக ஃபிட்னெஸ் என்று எடுத்துக்கொள்ளும்போது, குறைந்தபட்சம் தினசரி ஆறிலிருந்து ஏழு மணி நேரமாவது இரவு தூக்கம் முக்கியம். அதுபோன்று, உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ள நிறைய தண்ணீர் அருந்துவது அவசியமாகும். இது தவிர, காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவதையும் வழக்கமாக கொள்ளவேண்டும். மேலும், குறைந்தபட்சம் சின்னச் சின்ன உடற்பயிற்சியோ, நடைப்பயிற்சியோ செய்வதை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள முடியும்.

தொகுப்பு: ஸ்ரீதேவிகுமரேசன்.

The post பரத் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்! appeared first on Dinakaran.

Tags : Bharath ,
× RELATED ஹைபர் லூப் கதையில் 3 ஹீரோ, 3 ஹீரோயின்கள்