சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு டிடிவி தினகரன் இரங்கல்

சென்னை: சிவகாசி அருகே இரு வேறு இடங்களில் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது;

“சிவகாசி அருகே இரு வேறு இடங்களில் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்திருப்பதாக வரும் செய்தி வேதனை அளிக்கிறது. இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப்பிரார்த்திக்கிறேன்.தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பட்டாசு ஆலைகளில் முறையான பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாததே இது போன்ற விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுவதற்கான காரணம் என கூறப்படுகிறது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பட்டாசு விபத்தில் இதுவரை 30க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதைக் கவனத்தில் கொண்டு, அரசு அனைத்து பட்டாசு ஆலைகளிலும் ஆய்வு மேற்கொண்டு, பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதோடு, பட்டாசு தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு விபத்து மற்றும் பணிப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

The post சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு டிடிவி தினகரன் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: