பெரியபாளையம்: திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே சிறுவாபுரியில் பிரசித்திபெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், தொடர்ச்சியாக 6 வாரங்கள் நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதிலும், முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். இதில் மாசி மாத செவ்வாய்க் கிழமையான நேற்று சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காலை முதலே திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர்.
பொது தரிசனம், கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோயிலுக்கு வெளியே 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு வெயிலிலே நீண்ட வரிசையில் வந்து காத்திருப்பு மண்டபம் வழியே கோவிலுக்குள் வந்து சுமார் 5மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். புதிய வீடு கட்ட வேண்டும், திருமண தடை நீங்க வேண்டும் என பல்வேறு வேண்டுதலை நிறைவேறுவதற்காக கோயிலின் பின்புறம் உள்ள வேப்பமரத்தடியில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தும், செங்கற்களை அடுக்கி வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று மட்டும் சிறுவாபுரி முருகன் கோயிலில் சுமார் 40,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
* தீ விபத்தில் பெண் படுகாயம்
சிறுவாபுரி முருகன் கோயிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பல்வேறு வேண்டுதல்களுக்காக பக்தர்கள் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். அப்போது சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த பிரேமலதா (61) என்பவர் கோயிலில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீப்பற்றியது. இதில் அவருக்கு உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ஆரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது: நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் appeared first on Dinakaran.