சில்லி பாயின்ட்…

* ஆசிய கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில், இந்தியா – பாகிஸ்தான் அணிகளிடையே நாளை நடைபெற உள்ள சூப்பர்-4 சுற்று லீக் ஆட்டத்துக்கு ‘ரிசர்வ் டே’ அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக இப்போட்டி தடைபட்டால், செப்.11 திங்களன்று போட்டி தொடர்ந்து நடத்தப்படும். அதே சமயம், இலங்கை – வங்கதேசம் அணிகள் மோதும் போட்டிக்கு இப்படி ரிசர்வ் டே ஒதுக்கப்படாதது ஏமாற்றமளிப்பதாக வங்கதேச பயிற்சியாளர் சண்டிகா ஹதுரசிங்கா, இலங்கை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

* ஆசிய விளையாட்டுப் போட்டி காரணமாக தள்ளி வைக்கப்பட்ட புரோ கபடி போட்டி 10வது தொடருக்கான ஏலம் அக்.10, 11 தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த ஏலம் செப்.8, 9 தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

* சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் பி டிவிஷன் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி செப். 17, 18, 19 தேதிகளில் எழும்பூர் ஹாக்கி அரங்க வளாகத்தில் நடைபெற உள்ளது.

* இந்திய அணி வேகப் பந்துவீச்சாளர் பும்ரா தனது முதல் குழந்தையின் பிறப்புக்காக இந்தியா வந்திருந்தார். அதனால் ஆசிய கோப்பையில் நேபாளத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை. இந்நிலையில், மீண்டும் இலங்கை திரும்பிய பும்ரா நேற்று சக வீரர்களுடன் இணைந்து பயிற்சியை தொடங்கினார்.

* முழங்கால் மூட்டு காயத்தால் அவதிப்பட்டு வரும் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், உலக கோப்பை தொடருக்கு பின்னர் அறுவை சிகிச்சை செய்துகொள்ள உள்ளதால் இந்தியாவுடன் நடைபெற உள்ள டெஸ்ட் தொடரில் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளது.

* நியூசிலாந்து அணியுடன் கார்டிப், சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில், முதலில் பேட் செய்யுமாறு பணிக்கப்பட்ட இங்கிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 291 ரன் குவித்தது. ஹாரி புரூக் 25, டேவிட் மலான் 54, பென் ஸ்டோக்ஸ் 52, லிவிங்ஸ்டன் 52, கேப்டன் பட்லர் 72 ரன் விளாசினர். 4 வீரர்கள் அரை சதம் அடித்த நிலையில் ஜோ ரூட் மட்டும் 6 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். வோக்ஸ் 4, வில்லி 21 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசிலாந்து பந்துவீச்சில் ரச்சின் ரவிந்திரா 3, சவுத்தீ 2, பெர்குசன் 1 விக்கெட் வீழ்த்தினர்.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Related Stories: