உறவினருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்த விவகாரம்: ரவுடி வெள்ளைசுந்தர் வீட்டில் பிஸ்டல் பறிமுதல்; வக்கீல் கொடுத்ததாக திடுக் தகவல்

நெல்லை: நெல்லையில் உறவினருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்த விவகாரத்தில் சிறையிலடைக்கப்பட்ட வெள்ளை சுந்தர் வீட்டில் ஜெர்மன் மாடல் பிஸ்டலை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த பிஸ்டல் நெல்லை மாவட்ட வக்கீல் ஒருவருக்கு சொந்தமானது என்றும், வெள்ளை சுந்தரிடம் அவர் கொடுத்து வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த துப்பாக்கிக்கு லைசென்ஸ் உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.

நெல்லை டவுன் பகுதியை சேர்ந்த கோபிகுமார் மகன் அஜய்கோபி. இவர்களது உறவினர் ரவுடி வெள்ளைசுந்தர். இவர் மீது ஆள் கடத்தல், அரசு அனுமதியின்றி கைத்துப்பாக்கி வைத்திருந்தல், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் அடிதடி உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் கடந்த 2018ம் ஆண்டு நெல்லை டவுனில் அஜய்கோபிக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்தார். இந்த வீடியோ கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து பாளை போலீசார் வழக்குபதிவு செய்து அஜய்கோபியை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளி வந்தார். இவ்வழக்கில் தொடர்புடைய வெள்ளை சுந்தரை கைது செய்ய போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இந்நிலையில் டெல்லியில் வெள்ளை சுந்தரை தென் மண்டல ஐஜி ஆஸ்ரா கர்க், போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் திருப்பதி தலைமையில் எஸ்ஐ அருணாசலம் உட்பட 6 பேர் கொண்ட தனிப்படையினர் கைது செய்தனர். பின்னர் அவர் நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்ேபாது அவரை 3 நாள் காவலில் எடுக்க அனுமதி கோரி போலீசார் மனு செய்தததின் பேரில், கோர்ட் அனுமதி வழங்கியது. இதையடுத்து கடந்த 19ம்தேதி முதல் 21ம் தேதி வரை வெள்ளை சுந்தரிடம் நெல்லை டவுன் காவல் நிலையத்தில் மேற்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார், டவுன் போலீஸ் உதவி கமிஷனர் பொறுப்பு ஆவுடையப்பன், டவுன் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் திடுக்கிடும் தகவல் அம்பலமானது. அதாவது, நெல்லை சந்திப்பு அருகே பாலபாக்யா நகரில் உள்ள அவரது வீட்டில் டயர்களை அடுக்கி வைத்துள்ளார். டயர்களுக்கு கீழ் ஜெர்மன் மாடல் கைத்துப்பாக்கியும், 6 தோட்டாக்களும் வைத்துள்ளதாகவும், இந்த கைத்துப்பாக்கி நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வக்கீல் ஒருவருக்கு சொந்தமானது என்றும், அவர் தன்னிடம் கொடுத்து வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து தனிப்படையினர் அவரது வீட்டில் சோதனை நடத்தி அந்த துப்பாக்கியையும், 6 தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர். அந்த ஜெர்மன் மாடல் பிஸ்டலுக்கு லைசென்ஸ் பெறப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரிகளிடம் கேட்ட போது, ‘இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடந்து வருவதால் தற்போது அதன் விவரங்களை தெரிவிக்க இயலாது.’’ என்று கூறிவிட்டனர்.

The post உறவினருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்த விவகாரம்: ரவுடி வெள்ளைசுந்தர் வீட்டில் பிஸ்டல் பறிமுதல்; வக்கீல் கொடுத்ததாக திடுக் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: