பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும்: மம்தா பானர்ஜி உறுதி


கொல்கத்தா: பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உறுதி அளித்துள்ளார்.

பயிற்சி மருத்துவர் பலாத்கார கொலை சம்பவத்தை கண்டித்து பாஜக சார்பில் இன்று மேற்குவங்கத்தில் முழு அடைப்பு போராட்டம் நடந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கொல்கத்தாவில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொலையாளி சஞ்சய் ராய் என்பவரை சிபிஐ கைது செய்து விசாரித்து வருகிறது.

மேலும் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் உள்ளிட்ட மருத்துவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. அதேநேரம் மாணவியின் கொலையில் குற்றவாளிகளை காப்பாற்ற முயல்வதாகவும், முதல்வர் மம்தா பானர்ஜி ராஜினாமா செய்யக் கோரியும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

நேற்று மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு கொல்கத்தா தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் தடையை மீறி மாணவர்கள் செல்ல முயன்றதால், தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் மாணவர்களை போலீசார் விரட்டியடித்தனர். போராட்டம் வன்முறையாக மாறியதால், காவல்துறை வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து, இன்று காலை 6 மணி முதல் மாநில பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் 12 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் உறுதி அளித்துள்ளார். 10 நாட்களில் மரண தண்டனை கிடைக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும்.

அடுத்த வாரம் கூடும் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே மாநில சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும். போராடி வரும் மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். போராடி வரும் மருத்துவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று மேற்கு வங்கத்தில் பாஜக சார்பில் இன்று பந்த் நடைபெறும் நிலையில் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

The post பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும்: மம்தா பானர்ஜி உறுதி appeared first on Dinakaran.

Related Stories: