இளம்பெண்களின் பாலியல் தூண்டுதல் குறித்த கருத்து; கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவு ரத்து.! சுப்ரீம் கோர்ட் அதிரடி

புதுடெல்லி: கொல்கத்தாவில் ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், இளம் பருவத்தினரின் தனியுரிமைக்கான உரிமை என்ற கருத்தில் அம்மாநில உயர்நீதிமன்றம் விசாரணையை மேற்கொண்டது. இதையடுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ‘ஒவ்வொரு பெண்ணும் அவளுடைய உடலின் ஒருமைப்பாட்டுக்கான உரிமையை மற்றும் கண்ணியத்தையும் சுய மதிப்பையும் பாதுகாக்க வேண்டும். மேலும் பாலியல் தூண்டுதல்களை கட்டுப்படுத்த வேண்டும். இளம் பருவத்தினரின் உடலுறவு என்பது இயல்பானது. ஆனால் பாலியல் தூண்டுதல் அல்லது அத்தகைய தூண்டுதலில் ஒரு ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ தனிப்பட்ட சில செயல்களை சார்ந்தவையாகும். இதில் பாலியல் தூண்டுதல் என்பது சாதாரணமானது தான். ஆனால் அது நெறிமுறையானது இல்லை.

குறிப்பாக 16 முதல் 18 வயதுடைய இளம் பருவத்தினரிடையே ஒருமித்த உறவுகளை நிவர்த்தி செய்யும் விவகாரத்தில், போக்சோ சட்டத்தின் அடிப்படையில் எந்தவித விதிகளும் இல்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக இரண்டு நிமிட ஆசைக்காக தங்களை இழக்காமல், இளம் பெண்கள் தங்களது பாலியல் தூண்டுதல்களை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும்’ என்று கடந்த ஆண்டு இறுதியில் உத்தரவிட்டிருந்தது. மேற்கண்ட கொல்கத்தா உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு எதிராக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தது.

வாதங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு கடந்த ஆண்டு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அபய் எஸ் ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று வழங்கிய தீர்ப்பில், ‘இந்த விவகாரத்தில் இளம் வயது பெண்கள் பாலியல் தூண்டுதலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கொல்கத்தா உயர்நீதிமன்றம் முன்னதாக வழங்கிய உத்தரவு மற்றும் வழக்கில் விடுவிக்கப்பட்ட நபரின் தண்டனைக்கு தடை என்ற அனைத்து உத்தரவுகளும் ரத்து செய்யப்படுகிறது.

கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கள் அனைத்தும் மிகப்பெரிய ஆட்சேபனைக்கு உரியவை என்பது மட்டுமில்லாமல், பொருத்தமற்றவை ஆகும். ஒரு நீதிமன்றம் இதுபோன்ற சர்ச்சைக்குரிய தேவையற்ற கருத்துக்களை தெரிவிக்க கூடாது. குறிப்பாக உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தவறான உதாரணமாக அமைந்துள்ளது. நீதிபதிகளாக இருக்கும் நபர்கள் எவ்வாறு இதுபோன்று கருத்துக்களை, அதுவும் உத்தரவின் அடிப்படையில் தெரிவிக்கின்றனர் என்பது புரியவில்லை’ என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவினால், இந்த வழக்கின் குற்றவாளிக்கு மீண்டும் தண்டனை உறுதியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post இளம்பெண்களின் பாலியல் தூண்டுதல் குறித்த கருத்து; கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவு ரத்து.! சுப்ரீம் கோர்ட் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: