×

பாலியல் குற்றவாளி ஞானசேகரனுக்கு அரசின் உறுதியான நடவடிக்கையால் 5 மாதங்களில் தண்டனை: ஆர்.எஸ்.பாரதி அறிக்கை

சென்னை: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியை உடனடியாக கைது செய்து தண்டனை பெற்று தருவதற்கான உறுதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்தது. குற்றம் நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றச்செயலில் ஈடுபட்ட ஞானசேகரனை தமிழ்நாடு காவல்துறை கைது செய்தது.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு விரைவான நீதியையும் குற்றவாளிக்கு கடுமையான தண்டனையையும் பெற்றுத்தர வேண்டும் எனும் முனைப்போடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்ணா பல்கலைக்கழக வழக்கில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்தார். அதனடிப்படையில், கடந்த பிப்ரவரி 24ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், குற்றவாளி தப்பிக்க முடியாத வகையில் ஆதாரங்களை திரட்டி வலுவான வாதங்களை நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு எடுத்து வைத்ததின் அடிப்படையில் ஐந்து மாதத்தில் ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதிலும் அவர்களுக்கான விரைவான நீதியைப் பெற்று தருவதிலும் திராவிட மாடல் அரசு காட்டும் உறுதிப்பாட்டிற்கும் நடவடிக்கைகளுக்கும் இந்த தீர்ப்பு சாட்சியாகி இருக்கிறது.

மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பெண்களுக்கு எதிரான எந்த குற்றங்களையும் சகித்துக் கொள்ளாது, அதற்கெதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும். பாதிக்கப்பட்டோருக்கு விரைவான நீதியைப் பெற்றுத் தரும் என்பது மக்கள் மன்றத்தில் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

The post பாலியல் குற்றவாளி ஞானசேகரனுக்கு அரசின் உறுதியான நடவடிக்கையால் 5 மாதங்களில் தண்டனை: ஆர்.எஸ்.பாரதி அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Gnanasekaran ,R.S. Bharathi ,Chennai ,DMK ,Anna University ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்; மத...