இதையடுத்து, சீமான் தன்னை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டார். இவர்களின் முதலிரவு மதுரையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது என நடிகை விஜயலட்சுமி போலீசில் தெரிவித்துள்ளார். இதன் பிறகு நாங்கள் இருவரும் கணவன்-மனைவியாக வாழ்ந்தோம். இதனால், நான் 7 முறை கருவுற்றேன். பிறகு சீமான் என்னை கட்டாயப்படுத்தி அபார்ஷன் செய்ய வைத்தார். இதன் பிறகு என்னை சந்திப்பதை தவிர்த்து விட்டு, கயல்விழி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இது குறித்து 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் நடிகை விஜயலட்சுமி, சீமான் மீது மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, புகாரின் அடிப்படையில், வளசரவாக்கம் போலீசார் சீமான் மீது ஐபிசி 417, 420, 354, 376, 506(1) மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், அதிமுக ஆட்சியில் இயக்குநர் சீமான் மீது நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், இயக்குநர் சீமான் தனது கட்சியின் முக்கிய நிர்வாகியான மதுரை செல்வம் மூலம் விஜயலட்சுமியிடம் பேச்சுவார்த்தை நடத்தி கடந்த 2023 மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சீமான் தரப்பு சொன்னபடி மாதம் ₹50 ஆயிரம் பணம் அனுப்பியுள்ளனர். அதற்கு பிறகு பணம் அனுப்பவில்லை. இதுகுறித்து நடிகை விஜயலட்சுமி கேட்ட போது, மதுரை செல்வம் என்பவர் மூலம் சீமான் ஆபாச வீடியோ அனுப்பி மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை விஜயலட்சுமி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த மாதம் 28ம் தேதி சீமான் மீது மீண்டும் புகார் அளித்தார்.
அந்த புகாரின்படி விசாரணை நடத்த வளசரவாக்கம் போலீசாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி தற்போது ராமாபுரம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் மீது, அவரிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். மேலும், பாலியல் தொடர்பாக இயக்குநர் சீமானுக்கு போலீசார் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் கொடுத்துள்ளனர்.அதேநேரம் நடிகை விஜயலட்சுமி கடந்த வாரம் திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற கூடுதல் நீதிபதி பவித்ரா முன்பு 164 சட்டப்பிரிவுகளின் கீழ் நடிகை விஜயலட்சுமி 3 மணி நேரம் தான் சீமானுடன் வாழ்ந்ததற்கான ஆவணங்களை சமர்ப்பித்து வாக்குமூலம் அளித்தார். அதை நீதிபதி பதிவு செய்து கொண்டார்.
அதைதொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கையாக நடிகை விஜயலட்சுமி, இயக்குநர் சீமானால் 7 முறை கருவுற்று, கருக்கலைப்பு செய்ததாகவும், இதனால் நான் மிகவும் உடல் அளவிலும், மனதளவிலும் பலவினமாக இருப்பதாக நீதிபதியிடம் கூறியிருந்தார். அதேநேரம், இயக்குநர் சீமானால் 7 முறை கருக்கலைப்பு செய்ததாக நீதிபதியிடம் விஜயலட்சுமி வாக்குமூலம் அளித்திருந்தார்.
இதனால் நடிகை விஜயலட்சுமியிடம் போலீசார் நீதிமன்ற உத்தரவுப்படி மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை 11 மணிக்கு நடிகை விஜயலட்சுமியை வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையிலான போலீசார் பலத்த பாதுகாப்புடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆஜர்படுத்தினர். அப்போது மூத்த டாக்டர்கள் முன்னிலையில் நடிகை விஜயலட்சுமிக்கு பிரசவ வார்டில் உள்ள நவீன கருவிகள் மூலம் இயக்குநர் சீமானால் 7 முறை கருவுற்றது உண்மையா என்றும், அதனால் அவருக்கு, 7 முறை கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் பரிசோதனை செய்தனர். இந்த பரிசோதனை மாலை வரை நீடித்தது. டாக்டர்கள் அளிக்கும் முடிவுகளை நீதிமன்றத்தில் போலீசார் அறிக்கையாக தாக்கல் செய்வார்கள் என்று தெரிகிறது.
இந்த பரிசோதனையை தொடர்ந்து அடுத்த கட்டமாக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் மீது இயக்குநர் சீமானிடம் விசாரணை நடத்த உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
The post சீமானால் 7 முறை கருவுற்று, அபார்ஷன் செய்தது உண்மையா? நடிகை விஜயலட்சுமிக்கு உடல் பரிசோதனை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடந்தது appeared first on Dinakaran.