×

பள்ளி மேலாண்மை குழு தெரிவித்த அரசு பள்ளிகளுக்கான தேவையை நிவர்த்தி செய்யும் பணிகள் தீவிரம்: இதுவரை 26ஆயிரம் வேலைகள் நிறைவு; பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல்

* சிறப்பு செய்தி
பள்ளி மேலாண்மைக் குழு தெரிவித்திருந்த அரசு பள்ளிகளுக்கான தேவைகள் நிவர்த்தி செய்யும் பணிகள் முழுவீச்சில் தீவிரமாக நடந்து வருவதாகவும், இதுவரை 26 ஆயிரம் தேவைகள் சரி செய்யப்பட்டுள்ளதாகவும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அரசு பள்ளிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் பள்ளி மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டது. முதலில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மட்டும் செயல்பட்டு வந்த இந்த குழுவை மறுகட்டமைப்பு செய்து, தற்போது 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான 37 ஆயிரத்து 500 அரசு பள்ளிகளிலும் இந்த குழு செயல்பட்டு வருகிறது.

15 பெற்றோர், ஒரு தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர், ஒரு ஒருங்கிணைப்பாளர், பஞ்சாயத்து தலைவர், உறுப்பினர் என மொத்தம் 20 பேர் இந்த பள்ளி மேலாண்மைக் குழுவில் இடம்பெற்று உள்ளனர். இந்த குழு ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் கூடி பள்ளிகளின் தேவைகளை ஆலோசித்து அதனை நிவர்த்தி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளி மேலாண்மைக் குழு பணிகளை வேகமெடுக்கும் விதமாக, சமீபத்தில் பள்ளிகளின் தேவைகளை கண்டறிந்து அதனை ‘’டி.என்.எஸ்.இ.டி. பேரண்ட்ஸ்’’ என்ற அப்ளிகேஷன் வாயிலாக பதிவேற்றம் செய்ய பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியது.

அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள 2 ஆயிரத்து 689 உயர்நிலைப் பள்ளிகள், 2 ஆயிரத்து 598 மேல்நிலைப் பள்ளிகள், 6 ஆயிரத்து 359 நடுநிலைப் பள்ளிகள், 21 ஆயிரத்து 904 தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 33 ஆயிரத்து 550 அரசு பள்ளிகளில் இருந்து சுமார் 3 லட்சத்து 61 தேவைகள் இருப்பதாக அப்ளிகேஷனில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தன. இதை நிவர்த்தி செய்வதற்கான பணிகளை துரிதமாக மேற்கொள்ள அரசு உத்தரவிட்டு இருக்கிறது. அதற்கேற்றாற்போல், மாநில கண்காணிப்புக் குழு ஒன்றையும் அரசு நியமித்து இருக்கிறது.

அரசின் தலைமை செயலாளர் தலைமையில் 17 துறை சார்ந்த செயலாளர்கள் அடங்கிய இந்த குழு 3 மாதங்களுக்கு ஒரு முறையும் அல்லது தேவைக்கேற்பவும் கூடி பள்ளி மேலாண்மைக் குழு பணிகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாநில அளவில் குழு அமைக்கப்பட்ட நிலையில், இதேபோல் மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு பள்ளி மேலாண்மைக் குழு தெரிவித்திருந்த அரசு பள்ளிகளுக்கான தேவைகள் நிவர்த்தி செய்யும் பணிகள் முழுவீச்சில் தீவிரமாக நடந்து வருகின்றன. அந்த வகையில் பள்ளிகளுக்கு 3 லட்சத்து 61 ஆயிரம் தேவைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்த தீர்மானங்களை வகைப்படுத்தி, அதில் உடனடி தேவைகள் எவை என்பதை கண்டறிந்து, அதனை தேர்வு செய்து பட்டியலை பள்ளிக்கல்வித் துறை உருவாக்கி இருக்கிறது.

5 ஆயிரத்து 564 பள்ளிகளில் நீர் மற்றும் சுகாதாரம், மதிய உணவு வசதிகள், வளாக கட்டமைப்பு, கற்றல்-கற்பித்தலுக்கான பொருட்கள், பணியாளர்கள், மாணவர் சேர்க்கை-தக்க வைத்தல், அரசாங்க சான்றிதழ் மற்றும் உதவித்தொகை, நலத்திட்டங்கள் சார்ந்த 26 ஆயிரத்திற்கும் மேலான தேவைகள் உடனடியாக சரிசெய்யப்பபட்டுள்ளன. இதுவரை 5 ஆயிரம் பள்ளிகளின் தேவைகள் நிவர்த்தி செய்யப்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் மின்சாரம் மற்றும் பள்ளிக்கட்டிடங்கள் சார்ந்த உடனடி தேவைகள் பெருமளவில் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. இனி வரக்கூடிய நாட்களிலும் பள்ளிகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு, அரசு பள்ளிகளை பெருமையின் அடையாளமாக மாற்றுவதே முதல் லட்சியமாகும் என கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு பிறகு வருகிற 5ம் (நாளை) தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

* பள்ளிகளில் இருந்து பெறப்பட்ட தேவைகளின் எண்ணிக்கை 3,00,863
* முடிக்கப்பட்ட தீர்மானங்கள் 26,166
* நடைபெற்று வரும் பணிகள்1,851
* நிதி ஒதுக்கப்பட்டு தொடங்கப்படாத பணிகள் 212

The post பள்ளி மேலாண்மை குழு தெரிவித்த அரசு பள்ளிகளுக்கான தேவையை நிவர்த்தி செய்யும் பணிகள் தீவிரம்: இதுவரை 26ஆயிரம் வேலைகள் நிறைவு; பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : School Management Committee ,Special News School Management Committee ,Dinakaran ,
× RELATED அரசு பள்ளியில் கலைத் திருவிழா