×

கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களால்; இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக திகழ்கிறது தமிழ்நாடு: அரசு பெருமிதம்

சென்னை: தமிழ்நாட்டின் கல்வித்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய திட்டங்களால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளதுடன், இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழ்நாடு தலைசிறந்த மாநிலமாக விளங்குகிறது என அரசு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள விரிவான அறிக்கை: பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்: பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சிக்கென ரூபாய் 7500 கோடி மதிப்பீட்டில் பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் என்ற திட்டத்தை 5 ஆண்டுகளில் செயல்படுத்த அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதலாக வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிவறைகள், சுற்றுச்சுவர்கள், மாணவ/மாணவிகளுக்கு தங்கும் விடுதிகள் அமைக்க பள்ளிக் கல்வி இயக்ககம் மூலம் 20222023ஆம் நிதியாண்டில் நபார்டு கடனுதவித் திட்டத்தின் கீழ் ரூ.813 கோடி செலவில் 418 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 2394 கூடுதல் வகுப்பறைகள், 51 ஆய்வகங்கள், 10 மாணவ/மாணவிகள் தங்கும் விடுதிகள் ஏற்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 202324ம் நிதியாண்டில் 173 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.215.76 கோடி செலவில் 844 கூடுதல் வகுப்பறைகள் 21 அறிவியல் ஆய்வகங்கள் 184 கழிப்பறைகள் மற்றும் 700 மீட்டர் சுற்றுசுவர் ஏற்படுத்திட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 202324ம் ஆண்டிற்கு 23 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.58.61 கோடி செலவில் உட்கட்டமைப்பு வசதிகள் அளிக்கப்பட்டுள்ளது. 20242025ம் கல்வியாண்டில் 440 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.745.27 லட்சம் செலவில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பான கருத்துரு நபார்டு வங்கியின் ஒப்புலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஆக, 2022 முதல் 2024 வரை ஒப்பளிக்கப்பட்ட 614 பள்ளிகளுக்கு ரூ.1,086 கோடி செலவில் உட்கட்டமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள்: உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நிறுவப்பட்ட உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் முக்கியமாக மதிப்பீடு, பயிற்சி மற்றும் மொழி ஆய்வக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. 20212024ம் ஆண்டில் பாடநூல் கழகம் மற்றும் கல்வி சேவை கழகம் மூலம் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தம் ரூ.394.89 கோடியில் 8209 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை நிறுவுவதற்கான பணி ஆணைகள் வெளியிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. 202425ம் ஆண்டில், 654 அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை நிறுவ ரூ.41.856 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திறன்மிகு வகுப்பறைகள்: மாணவர்களுக்கு கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்முறையை எளிதாக்குவதற்கு திறன்மிகு வகுப்பறைகள் (ஸ்மார்ட் வகுப்பறைகள்) பள்ளிகளில் செயல்படுத்தப்படுகின்றன. மாணவர்கள் ஆடியோ மற்றும் வீடியோவைப் பார்க்கவும், கேட்கவும் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக அதிநவீன கற்றல் மற்றும் கற்பித்தல் சூழலை உருவாக்கும்போது பாடப் பொருட்கள் மற்றும் பாடநூல் தொடர்பான கூறுகளை விரைவாகப் புரிந்துகொள்வார்கள்.
இதற்காக 202122ம் ஆண்டில் 865 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்கிட ரூ.20.76 கோடியும், 202223ம் ஆண்டில் 12,500 தொடக்கப் பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கிட ரூ.230 கோடியும், 202324ம் ஆண்டில் 7500 தொடக்கப் பள்ளிகளுக்கு திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்கிட ரூ.150 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு மொத்தம் 20,865 அரசுப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
202425ம் ஆண்டில், 6,179 அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு திறன்மிகு வகுப்பறைகள் அமைத்திட ரூ.117.401 கோடி மற்றும் ரூ. 1,750 அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போர்டு வழங்க ரூ.33,250 கோடி அனுமதிக்கப்பட்டது. ஆக, 202122 முதல் 202425 வரை 28,794 பள்ளிகளில் 551.411 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் கடந்த 2022ம் ஆண்டு செப்.15ம் தேதி மதுரைத் திருநகரில் தொடங்கிவைக்கப்பட்டு, 1,545 பள்ளிகளைச் சேர்ந்த 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்றனர். கலைஞர் பிறந்த ஊராகிய திருக்குவளையில் கடந்த 2023ம் ஆண்டு ஆக.25ம் தேதி முதல்வரால் தொடங்கிவைக்கப்பட்டு, 30 ஆயிரத்து 992 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 18லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த ஜூலை 15ம் தேதி காமராஜர் பிறந்த நாளில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசின் சார்பில் தொடங்கி வைத்து மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்து வைத்தார். காலை உணவுத் திட்டத்தின் மூலம் தற்போது தமிழ்நாடு முழுவதிலும் மொத்தம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் காலை உணவைச் சூடாகவும் சுவையாகவும் உண்டு மகிழ்ச்சியோடு பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்தினர்.

காடு, மலைப்பகுதி குழந்தைகளுக்காகச் சிறப்பு வசதி: காட்டுப் பகுதிகளிலும் மலைப் பகுதிகளிலும் பள்ளிகளுக்குச் சென்று வருகின்ற குழந்தைகளுக்கு ஆபத்தான பல சிரமங்கள் உள்ளன. அந்தச் சிரமங்கள் அனைத்தையும் நீக்கிட முதலமைச்சர் சில சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளார்கள். 202324ம் ஆண்டில் தொலைதூர, அடர்ந்த காடு, மலைப் பகுதிகளில் உள்ள 1692 குடியிருப்புகளைச் சேர்ந்த தொடக்க நிலை முதல் உயர்நிலை வரையில் படிக்கும் 27,707 மாணவர்கள் பள்ளிக்குப் பாதுகாப்பாகச் சென்றுவர போக்குவரத்து பாதுகாவலர்களுடன் வசதிகளையும் ஏற்படுத்த உத்தரவிட்டார். இதனால், குழந்தைகள் அச்சமில்லாமல் பள்ளிகளுக்கு வந்து பயில்வது அப்பகுதி மக்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. மாற்றுத்திறன் மாணவர்களுக்குத் தனி கவனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் கல்வி நலனில் ஆசிரியர்கள் மனிதாபிமானத்துடன் தனி கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்கள். அதன்படி 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அறிவுசார் குறைபாடுள்ள மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் அடிப்படை எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு திறன்களை உறுதிசெய்யும் வகையில் எளிமைப்படுத்தப்பட்ட மாணவர் பயிற்சி நூல் மற்றும் ஆசிரியர் கையேடு போன்ற கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களைச் சிறப்புப் பயிற்றுநர்கள் மூலம் அடையாளம் காணும் வகையில் ‘நலம்நாடி’ என்னும் செயலி ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் நியமனம்: முதல்வர் ஏழை, எளிய மக்களும் நாடும் அரசுப் பள்ளிகளின் கல்விப் பணிகள் தடையின்றிச் செம்மையாக நடைபெற வேண்டும் என்பதில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு வழங்கியுள்ள அறிவுரைகள்படி 4,989 இடைநிலை ஆசிரியர்கள் 5,154 பட்டதாரி ஆசிரியர்கள் 3,876 முதுகலை ஆசிரியர்களுக்கான மொத்தம் 14,019 ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மூலம் நியமனம் செய்யப்பட்டு வகுப்பறைகளில் கற்பித்தல் பணி தடையின்றி மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. ஆசிரியர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் 76 நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இடைநிலை ஆசிரியர்களுக்கு கைக் கணினிகள்: முதல்வரின் சிறப்புத் திட்டமாக தொடக்கப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் 79,723 இடைநிலை ஆசிரியர்களுக்கு மாறிவரும் கற்றல் கற்பித்தல் முறைகளுக்கு ஏற்பத் தங்களைச் சிறப்பாக மெருகேற்றிக் கொள்வதற்கு உதவும் வகையில் 101 கோடியே 48 இலட்சம் ரூபாய்ச் செலவில் கைக் கணினிகள் வழங்க ஆவன செய்துள்ளார்கள். நான் முதல்வன் திட்டம்: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 912ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு, ஏறத்தாழ 10 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு: தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு மூலம் 11ம் வகுப்பு பயிலும் 1,000 மாணவ மாணவியர் தேர்வு செய்யப்பட்டு ஊக்கத் தொகையாக மாதம் ரூ.1,000 வீதம் இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படுகிறது. மாணவ மாணவியர்களுக்கு மிதிவண்டிகள்: கிராமப்புற மாணவ மாணவிகள் பள்ளிகளுக்கு உரிய நேரத்தில் வந்து செல்வதற்கு வசதியாக 3,44,144 பள்ளி மாணவமாணவியர்களுக்கு ரூ.165.84 கோடி செலவில் இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. புதுமைப்பெண் தமிழ்ப் புதல்வன் திட்டங்கள்: அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியிலும் 6ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று பின்னர் உயர்கல்வி பயிலும் மாணவியர்க்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம், அதேபோல மாணவர்களுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் ஆகியவற்றில் ஏறத்தாழ 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயன் பெறுகின்றனர். இப்படியாக, புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், திறன்மிகு வகுப்பறைகள், உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள், காலை உணவுத் திட்டம், இடைநிலை ஆசிரியர்களுக்கு கைக் கணினிகள் இப்படிப் பல்வேறு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதன் பயனாக அரசுப் பள்ளிகளுக்கு வரும் மாணவமாணவியர் எண்ணிக்கை உயர்ந்து, கல்வித் தரத்தில் இந்தியாவில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக விளங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களால்; இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக திகழ்கிறது தமிழ்நாடு: அரசு பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,India ,CHENNAI ,Tamil Nadu government ,Anbazagan ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை...