ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாளவாடி மலைப் பகுதியில் காட்டுயானை தாக்கி விவசாயி பரிதாப உயிரிழப்பு..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாளவாடி மலைப் பகுதியில் காட்டுயானை தாக்கி விவசாயி உயிரிழந்தார். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள், அருகாமையில் உள்ள கிராமங்களில் விவசாய தோட்டங்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது. இதற்கிடையே தாளவாடி மலைப் பகுதியில் உள்ள முதியனூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ராமு. இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் ராகி பயிரிட்டிருந்தார்.

ராகி அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ராமு தனது நிலத்தில் உள்ள ராகி பயிரை அறுவடை செய்து நிலத்தில் காயவைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகளால் ராகி பயிருக்கு சேதம் ஏற்படுவதால் தினமும் ராகி பயிருக்கு விவசாயி ராமு காவல் இருந்து வருகிறார். அதன்படி நேற்று இரவு தனது தோட்டத்துக்கு சென்று காவல் பணி மேற்கொண்டார். இதற்கிடையே இன்று அதிகாலை வனப்பகுதியை விட்டு வெளியேறி விளைநிலத்திற்குள் புகுந்த காட்டுயானை ராகி பயிரை மிதித்து சேதப்படுத்தியது.

இதனை கண்ட ராமு காட்டு யானையை விரட்ட முயன்றுள்ளார். அப்போது விவசாயியை துரத்தி சென்ற யானை, தும்பிக்கையால் அவரை தூக்கி கீழே போட்டு மிதித்ததில் சம்பவ இடத்திலேயே ராமு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இது குறித்து ஆசனூர் காவல்துறை, தாளவாடி வனத்துறையினருக்கு விவசாயிகள் தகவல் அளித்தனர். அதன்படி உயிரிழப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. வனப்பகுதியில் இருந்து காட்டு யானை வெளியேறுவதை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாளவாடி மலைப் பகுதியில் காட்டுயானை தாக்கி விவசாயி பரிதாப உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: