தமிழ்நாடு முழுவதும் 17 இடங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.2.33 கோடி ரொக்க பணம், ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள 1024 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 3 தொழிலதிபர்களின் நிறுவனங்கள் மற்றும் அவர்கள் பெயரில் உள்ள 30 வங்கி கணக்களில் இருந்த ரூ.13 கோடி ரொக்க பணம் முடக்கப்பட்டது. அதைதொடர்ந்து சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் தொழிலதிபர்களான ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் ஆகிய 3 பேரும், தங்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து உறவினர்கள் மற்றும் கூட்டாளிகளின் பெயரில் போலியான நிறுவனங்கள் தொடங்கி அதில் மணல் குவாரியில் வந்த வருமானத்தை முறைகேடாக முதலீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் மோசடியில் ஈடுபட்ட 3 மணல் குவாரி அதிபர்களுக்கு சொந்தமான 35 வங்கி கணக்கில் உள்ள ரூ.2.25 கோடி பணம் மற்றும் குவாரிகளில் மணல் அள்ள பயன்படுத்திய ரூ.128.34 கோடி மதிப்பிலான 209 இயந்திரங்கள் என மொத்தம் ரூ.130.60 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களை கடந்த 2ம் தேதி முடக்கியது. இந்நிலையில், தொழிலதிபர் கரிகாலனுக்கு சொந்தமான சென்னை நந்தனம் மேற்கு சிஐடி நகரில் உள்ள வீடு, அடையாரில் உள்ள அவரது நண்பரான அருண் என்பவருக்கு சொந்தமான வீடுகளில் நேற்று பகல் 2 மணி முதல் இரவு வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கரிகாலன் நண்பர் அருண் வீட்டில் இருந்து வழக்கு தொடர்பாக பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து தொழிலதிபர் கரிகாலனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
The post ரூ.130 கோடி சொத்தை முடக்கிய நிலையில் மணல் குவாரி ஒப்பந்ததாரர் இடங்களில் மீண்டும் சோதனை: முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது அமலாக்கத்துறை appeared first on Dinakaran.