சென்னை: நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் முதலிடம் பிடித்தவர் பட்டியலில் குழப்பம் இருப்பதாகவும், குறிப்பிட்ட மாநிலத்தை சேர்ந்த 8 பேர் தொடர்ச்சியாக எப்படி டாப்லிஸ்டில் இடம் பெற்றனர் என்றும் மாணவர்கள், கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் நீட் தேர்வு விவகாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இளநிலை மருத்துவம் மற்றும் இளநிலை அறுவை சிகிச்சை (எம்பிபிஎஸ்) இளநிலை பல் அறுவை சிகிச்சை (பிடிஎஸ்) ஆயுர்வேதம், மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (பிஏஎம்எஸ்) இளநிலை சித்த மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (பிஎஸ்எம்எஸ்) இளநிலை யுனானி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (பியூஎம்எஸ்) மற்றும் இளநிலை ஹோமியோபதி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (பிஎச்எம்எஸ்) மற்றும் பி.எஸ்.சி (எச்) நர்சிங் படிப்புகளில் சேர்க்கைக்கான தகுதி நுழைவுத்தேர்வு (நீட்) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டில் உள்ள 540க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் 80,000க்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. மேற்கண்ட இந்த படிப்புகளில் நாடு முழுவதும் உள்ள மொத்த இடங்களில் 2024-2025ம் ஆண்டு மாணவர் சேர்க்கையின்போது நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை வழங்கப்பட உள்ளது. இதற்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு (நீட்-2024) கடந்த மே மாதம் 5ம் தேதி நடந்தது. தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்-இளநிலை 2024) முடிவுகளை ஜூன் 4ம் தேதி வெளியிட்டது. இந்த ஆண்டு, மொத்தம் 67 மாணவர்கள் நீட் அகில இந்திய தரவரிசை (AIR) 1 ஐ 99.997129 சதவீத மதிப்பெண்களுடன் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பல மாணவர்களும், ஆசிரியர்களும் கேள்வி எழுப்பியதுடன், 718 மதிப்பெண்கள் எப்படி பெற முடியும் என்றும், தங்கள் சந்தேகத்தையும், இது சாத்தியமற்றது என்றும் கூறியுள்ளனர். 720க்கு பிறகு, அடுத்தகட்டமாக 716 மதிப்பெண்களை மட்டுமே பெற முடியும் மற்றும் 718 மதிப்பெண்கள் பெறுவதற்கு எந்த சாத்தியமுமில்லை என்று அடித்துக் கூறுகின்றனர். இதுதவிர நீட் தேர்வு நடந்தபோது கேள்வித்தாள் வெளியில் கசிந்ததாக கூறப்படும் ஹரியானாவில் செயல்பட்டு வரும் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற மாணவர்களின் குறிப்பிட்ட 8 மாணவர்கள் மட்டும் டாப்லிஸ்டில் இடம் பெற்றது எப்படி என்ற கேள்வியை கல்வியாளர்கள் கேட்டு வருகின்றனர். மேலும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்.
* தேசிய தேர்வு முகமை விளக்கம்
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் இந்த கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள விளக்கம்: ‘‘தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வின் (நீட்) போது, தேர்வு எழுதவதற்கான நேரத்தை இழந்ததாகக் கூறி புகார் தெரிவித்த மாணவ மாணவியருக்கு மட்டும் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன’’ என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. நீட்-2024 தேர்வு கடந்த மே 5ம் தேதி நடத்தும்போது நேரத்தை இழப்பது குறித்த கவலைகளை எழுப்பிய சில கருத்துருக்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகளை தேசிய தேர்வு முகமை பெற்றுள்ளது. இதுபோன்ற வழக்குகள், கருத்துருக்கள் பரிசீலிக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் வடிவமைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட 13.06.2018 தேதியிட்ட அதன் தீர்ப்பின் மூலம், நீட் (யுஜி) 2024 தேர்வர்கள் எதிர்கொள்ளும் நேர இழப்பை நிவர்த்தி செய்ய செயல்படுத்தப்பட்டது.
தேர்வு நேர இழப்பு கண்டறியப்பட்டு, அத்தகைய மாணவ மாணவியருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. எனவே, மாணவ மாணவியரின் மதிப்பெண்கள் 718 அல்லது 719 ஆகவும் இருக்கலாம் என்றும், நீட் அகில இந்திய தரவரிசையில் (ஏ.ஐ.ஆர் 1) முதலிடம் பிடித்த 67 மாணவர்களும் முதலிடம் பெறவில்லை என்றும் ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களின் மதிப்பெண் அட்டையில் ஒரு தனிப்பட்ட தரவரிசை வழங்கப்பட்டுள்ளது, இது அந்த ஸ்கோர் கார்டுகளின் அடிப்படையில் மட்டுமே கிடைக்கிறது. தேசிய தேர்வு முகமை அறிவித்த டை-பிரேக்கிங் கொள்கைகளின் அடிப்படையில் இவை கணக்கிடப்பட்டுள்ளன என்றும், தேசிய தேர்வு முகமை தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளது.
The post ஒரே மாநிலத்தில் 8 மாணவர்கள் டாப்லிஸ்டில் இடம் பெற்றது எப்படி? நீட் தேர்வு ரேங்க் பட்டியலில் குழப்பம்: விசாரணை நடத்த கோரிக்கை appeared first on Dinakaran.