புதுடெல்லி: டெல்லியில் சீக்கிய கலவர வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்பி சஜ்ஜன்குமார் குற்றவாளி என்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. கடந்த 1984ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சீக்கிய பாதுகாவலர்களால் கொல்லப்பட்டதை அடுத்து சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் வெடித்தது. நவம்பர் ஒன்றாம் தேதி சரஸ்வதி விஹாரில் ஜஸ்வந்த் சிங் மற்றும் அவரது மகன் தருண்தீப் சிங் ஆகியோர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் எம்பி சஜ்ஜன்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா முன்னிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. திகார் சிறையில் இருந்து சஜ்ஜன்குமார் அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி இந்த வழக்கில் சஜ்ஜன்குமார் குற்றவாளி என்று அறிவித்து உத்தரவிட்டார். தண்டனை விவரங்கள் 18ம் தேதி அறிவிக்கப்படும்.
The post சீக்கிய கலவர வழக்கில் முன்னாள் காங். எம்பி சஜ்ஜன்குமார் குற்றவாளி: டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.