ரூ.13,500 கோடி மதிப்பு திட்டங்களுக்கு அடிக்கல் தெலங்கானாவில் மஞ்சள் வாரியம் அமைக்கப்படும்: பிரதமர் மோடி பேச்சு

திருமலை: ‘தெலங்கானாவில் மஞ்சள் வாரியம் அமைக்கப்படும்’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தெலங்கானா சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி நேற்று தெலங்கானாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். டில்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் ஷம்ஷாபாத் விமான நிலையத்துக்கு வந்தார். பிரதமர் மோடியை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், ஒன்றிய அமைச்சர் கிஷன் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் விமான நிலையத்தில் இருந்து சிறப்பு ஹெலிகாப்டரில் மகபூப்நகர் சென்றடைந்தார்.

தொடர்ந்து மகபூப்நகரில் இருந்து காணொலி வாயிலாக ரூ.13,500 கோடிக்கும் அதிகமான மதிப்பில் தேசிய நெடுஞ்சாலைகள், ரயில்வேயில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதைத்தொடர்ந்து, நாக்பூர்- விஜயவாடா பொருளாதார வழித்தடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேலும், பாரத் பரியோஜனா திட்டத்தின் ஒரு பகுதியாக ஐதராபாத் – விசாகப்பட்டினம் வழித்தடம் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய் திட்டத்துடன், ஐதராபாத்- ராய்ச்சுரு ரயில் தொடங்கப்பட்டது. ஐதராபாத் பல்கலைக்கழகத்தின் 6 புதிய கட்டிடங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
பின்னர் பாலமுருவில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது,

“கொரோனா பரவலுக்குப் பிறகு, மஞ்சளின் நன்மையை உலகமே அறிந்தது. பல நாடுகளில் மஞ்சள் குறித்த ஆராய்ச்சிகள் அதிகரித்துள்ளது. நாட்டிலேயே அதிகளவில் மஞ்சள் உற்பத்தி செய்யும் மாநிலம் தெலங்கானா என்பது தெரிந்ததே. மாநிலத்தில் மஞ்சள் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மஞ்சள் வாரியம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலனில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு எப்போதும் உறுதியாக இருக்கும். தெலங்கானாவில் முலுகு மாவட்டத்தில் ரூ.900 கோடியில் சம்மக்கா – சாரக்கா பழங்குடியினர் பல்கலைக்கழகம் என்ற பெயரில் பழங்குடியினர் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். ரூ.1000 கோடியில் புதிதாக மேற்கொள்ளப்படும் பணிகளால் பல ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்று பயனடைவார்கள். மறுபுறம் தெலங்கானாவில் பல தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பபட்டு அதற்கான நிதியும் வழங்கப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைகள் அமைப்பதன் மூலம் அனைத்து மாநிலங்களுடனும் தெலங்கானாவின் இணைப்பு அதிகரித்துள்ளது. ஹன்மகொண்டாவில் கட்டப்படும் ஜவுளிப் பூங்கா வாரங்கல் மற்றும் கம்மம் மாவட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும். நாட்டில் கட்டப்படும் 5 ஜவுளிப் பூங்காக்களில் ஒன்று தெலங்கானாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* பிரதமர் வரவேற்பில் முதல்வர் ஆப்சென்ட்

ஷம்ஷாபாத் விமான நிலையத்தில், தெலங்கானா அரசு சார்பில் அமைச்சர் தலசானி னிவாஸ் யாதவ் பிரதமர் மோடியை வரவேற்றார். வழக்கம்போல், பிரதமர் வருகையில் பங்கேற்காமல் முதல்வர் கே.சி.ஆர். புறக்கணித்தார். கேசிஆர் தற்போது வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கேடிஆர் சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

The post ரூ.13,500 கோடி மதிப்பு திட்டங்களுக்கு அடிக்கல் தெலங்கானாவில் மஞ்சள் வாரியம் அமைக்கப்படும்: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: