ரூ.60 லட்சம் சொத்து பத்திரம் மாயம் 90 வயது முதியவர் மின் அஞ்சல் புகார் : ரத்தோர் உடனடி நடவடிக்கை

சென்னை: ரூ.60 லட்சம் மதிப்புள்ள சொத்து பத்திரம் மாயமானது குறித்து 90 வயது முதியவர் மின் அஞ்சலில் அளித்த புகாரின் மீது போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை பெசன்ட் நகர் கலாஷேத்ரா காலனி பார்வதி தெருவை சேர்ந்தவர் ராஜகோபாலன் (90). இவர், திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டு வாரியத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 708 சதுர அடி அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை கடந்த 20.11.1995ம் ஆண்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தார்.

இதன் தற்போதைய மதிப்பு ரூ.60 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் குடியிருப்பின் கிரைய பத்திரம் கடந்த 2021ம் ஆண்டு தொலைந்துவிட்டது. இதையடுத்து முதியவர் ராஜகோபாலன் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே முதியவர் ராஜகோபாலன் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரின் மின் அஞ்சலுக்கு கடந்த 13ம் தேதி புகார் அளித்தார். இந்த புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அதன்படி சென்னை மாநகர காவல் குற்ற ஆவண காப்பகம் மூலம் உடனடி விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுத்து, காணாமல் போன வீட்டு பத்திரத்திற்கான ‘கண்டறிய முடியாத சான்றிதழ்’ வழங்கப்பட்டது. இதையடுத்து புகார் அளித்த முதியவர் ராஜகோபாலன் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட போலீஸ் கமிஷனருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

The post ரூ.60 லட்சம் சொத்து பத்திரம் மாயம் 90 வயது முதியவர் மின் அஞ்சல் புகார் : ரத்தோர் உடனடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: