×

தமிழ்நாடு முழுவதும் 68 இடங்களில் 1500 சவரன், பணம் கொள்ளையடித்து ரூ.4.5 கோடியில் மில், ரூ.1.5 கோடியில் நிலம் வாங்கிய கொள்ளையன் கைது

கோவை: தமிழ்நாடு முழுவதும் 68 இடங்களில் கொள்ளையில் ஈடுபட்டு ரூ.4.5 கோடியில் மில் வாங்கிய கொள்ளையன், கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டான். கோவையில் சிங்காநல்லூர், பீளமேடு, ராமநாதபுரம், துடியலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் 18 வீடுகளில் ஆயுதங்களை காட்டி மர்ம நபர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர், கோவையில் ஒரு வீட்டில் கொள்ைளயடிக்க முயன்றதாக ஒருவரை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர் தேனி பெரியகுளத்தை சேர்ந்த ‘ராடு மேன்’ என அழைக்கப்படும் மூர்த்தி (38) என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து அவரது கூட்டாளியான தேனியை சேர்ந்த அம்சராஜ் (26) என்பவரையும் போலீசார் பிடித்தனர். இவர்கள் பல இடங்களில் கொள்ளையடித்தது தெரிய வரவே இருவரும் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக நேற்று துணை கமிஷனர் ஸ்டாலின் கூறியதாவது: மூர்த்தி கடந்த 4 ஆண்டாக திருட்டு, கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது தமிழ்நாடு அளவில் 68 கொள்ளை வழக்குகள் உள்ளன. இவர் முதல் முறையாக கோவையில் கைதாகி இருக்கிறார்.

இவரிடம் ஒரு கார், 6 பைக் பறிமுதல் செய்யப்பட்டது. கொள்ளை பணத்தில் ரூ.13 லட்சத்தில் சொகுசு பைக் வாங்கியிருக்கிறார். ராஜபாளையத்தில் ரூ.4.5 கோடியில் ஸ்பின்னிங் மில் வாங்கியுள்ளார். ராஜபாளையம் பஸ் ஸ்டாண்டில் சுமார் 1.5 கோடி ரூபாயில் 57 சென்ட் இடம் வாங்கியிருக்கிறார். அங்கே கட்டிடம் கட்டி, கடை நடத்த திட்டமிட்டிருந்தார். மாநில அளவில் 68 கொள்ளை வழக்கில் 1,500 பவுன் தங்க நகைகள், ரூ.1.76 கோடி கொள்ளையடித்துள்ளார்.  இவற்றை கொடுத்து மனைவி மூலமாக பல்வேறு இடங்களில் சொத்து வாங்கியுள்ளார். இவருடன் தொடர்புடைய விருதுநகரை சேர்ந்த சுரேஷ் என்பவர் விருதுநகர் போலீசாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டார். மூர்த்தியின் கூட்டாளிகளான மனோஜ்குமார், சுதாகர், ராம் பிரகாஷ், பிரகாஷ் ஆகியோரை தேடி வருகிறோம்.

கொள்ளையடித்த பணத்தை இவர்கள் பங்கு போட்டுள்ளனர். சந்திரசேகரன், பெருமாள், காளிதாஸ், ஒரு பெண் ஆகியோர் மூலமாக நகைகளை உருக்கி தங்கக்கட்டியாக மாற்றி விற்பனை செய்துள்ளனர். மூர்த்தியின் மனைவி ராஜபாளையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மூர்த்தி மீது விருதுநகரில் 20 வழக்குகள், மதுரையில் 14 வழக்குகள், திருச்சியில் 16 வழக்குகள் உள்ளன. கோவையில் அவர் கொள்ளையடித்த 63 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன. மூர்த்தியின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மூர்த்தியுடன் தொடர்புடைய மற்ற கொள்ளையர்களையும் விரைவில் பிடித்து விடுவோம்.  இவ்வாறு துணை கமிஷனர் ஸ்டாலின் கூறினார்.

‘ராடு மேன்’ சிக்கியது எப்படி?; கொள்ளை வழக்கில் கைதான மூர்த்தி எப்போதும் இரும்பு ராடு வைத்து பூட்டிய வீட்டை திறந்து கொள்ளையடிப்பதால் அவருக்கு கொள்ளையர் வட்டாரத்தில் ‘ராடு மேன்’ என அடைமொழி உருவானது. மூர்த்தி எப்போதும் தலையில் குல்லா அணிந்து முகத்தை மறைத்து திருட செல்வார். அப்போது நீல நிற முழுக்கை சட்டை அணிவார். அதற்குள் பேக் வைத்திருப்பார். அதில்தான் திருடிய நகை, பணம் போட்டு வைத்திருப்பார். சில நேரங்களில் தனியாகவும், ஆள் இருந்தால் கூட்டாளிகளுடன் சென்றும் கொள்ளையடிப்பாராம். பெரும்பாலும் ரயில் பாதை அருகே வீடுகளை நோட்டம்விட்டு கொள்ளையடித்து பல கிமீ தூரம் நடந்து சென்று பின்னர் பஸ் ஏறி தப்பி செல்வார். இதனால்தான் இவரை இத்தனை ஆண்டுகள் பிடிக்க முடியாமல் இருந்துள்ளது. எந்த இடத்திலும் கண்காணிப்பு கேமராவில் இவரின் முகம் தெரியவில்லை. கேமரா இருந்தாலும் இவர் முகத்தை மறைத்தபடி சென்று தப்பியுள்ளார். ஆனால் கோவை போலீசார் மூர்த்தியின் நீல நிற சட்டை, குல்லாவை வைத்து தொடர்ச்சியாக கண்காணித்து பிடித்துள்ளனர்.

The post தமிழ்நாடு முழுவதும் 68 இடங்களில் 1500 சவரன், பணம் கொள்ளையடித்து ரூ.4.5 கோடியில் மில், ரூ.1.5 கோடியில் நிலம் வாங்கிய கொள்ளையன் கைது appeared first on Dinakaran.

Tags : Sawarans ,Tamilnadu ,Coimbatore ,Tamil Nadu ,Singanallur ,Beelamedu ,Ramanathapuram ,Thudiyalur ,
× RELATED ஆன்லைன் சூதாட்ட வழக்கில் காஞ்சிபுரம் ஏஜென்ட் கைது