மெட்ரோ ரயில் தொடங்குவதற்கு முன்பு டோக்கன் சிஸ்டம் முறையில் டிக்கெட் வழங்கியதை மாற்றி தற்போது வாட்ஸ் அப் மூலமாக வழங்குகிறது. இதுதவிர, மாதாந்திர பயண அட்டை விற்பனை அதிகரித்தல், ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை, பயணிகளுக்கு பல்வேறு சலுகை என புதிய புதிய விளம்பரங்கள் வாயிலாக தற்போது தினசரி லட்சக்கணக்கானோர் பயணம் மேற்கொள்ளும் வகையில் திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது.
அந்தவகையில், பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், வருவாயை அதிகரிக்கவும் மெட்ரோ நிலையங்களுக்கு அருகே சிறியளவிலான மினி மால், சிறிய வணிக வளாகம் அல்லது பொழுது போக்கு இடங்கள், கட்டி அதனை வாடகைக்கு விட திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, மெட்ரோவின் முதற்கட்ட திட்டத்தில் சில நிலையங்களில் கடைகள், கபேக்கள் மற்றும் உணவகங்களுக்கு சிறிய கடைகளை கட்டி மெட்ரோ நிர்வாகம் வாடகைக்கு விட்டுள்ளது. இந்நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் துரிதமாக நடந்து வருவதால் இந்த திட்டத்தை சாத்தியப்படுத்த மெட்ரோ தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன
இதுகுறித்து மெட்ரோ அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மெட்ரோ கட்டம் – 1 திட்டத்தில் செயல்படுத்தியது போல, இந்த முறை நிர்வாகத்தின் சார்பில் ரயில் நிலையங்களுக்கு அருகிலேயே பல மாடி கட்டிடங்களை கட்டி வாடகை விட திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, முதற்கட்டத்தில் அரும்பாக்கம், நேரு பூங்கா, சைதாப்பேட்டை உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் தற்போது இடங்களை கண்டறிந்துள்ளோம். இந்த இடத்தில் விரைவில் கட்டுமான பணிகளையும் தொடங்க உள்ளோம். அதாவது, நேரு பார்க் மெட்ரோ ரயில் நிலையம் அருகே 5,264 சதுர மீட்டர் பரப்பளவில் 9 தளங்கள் கொண்ட கோபுரம் கட்டவும், சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதைக்கு மேல் 2 மாடி கட்டிடம் கட்டவும், அரும்பாக்கம் நிலையத்தில் 7 மாடி கட்டிடம் கட்டவும் திட்டமிட்டுள்ளோம். இந்த கட்டிடங்களில் இயற்கையான சூழ்நிலை மற்றும் தோட்டக்கலை பணிகளையும் உருவாக்க உள்ளோம். மேலும், கேமிங் மற்றும் பிற வசதிகளுடன் கூடிய மினி மால் அல்லது பொழுதுபோக்கு மையம், வணிக வளாகம் அமைக்கவும் விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. டெண்டர் இப்போது மதிப்பீட்டில் உள்ளதால் விரைவில் திட்டத்தை இறுதி செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
The post வருவாயை அதிகரிக்கும் வகையில் மெட்ரோ அருகே மினி மால் கட்ட திட்டம்: வணிக, பொழுதுபோக்கு மற்றும் அலுவலக கட்டிடங்களையும் உருவாக்க முடிவு appeared first on Dinakaran.