×

ஓய்வுபெற்ற அனைத்து நீதிபதிகளும் ஒரே மாதிரியான ஓய்வூதியம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு வெவ்வேறு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பான பிரச்சினை இருந்து வந்தது. குறிப்பாக ரூ. 15,000 ஓய்வூதியம் பெறுவதாகக்கூறி ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘சுமார் 13 ஆண்டுகளாக மாவட்ட நீதிமன்றத்தில் நீதித்துறை அதிகாரியாக பணியாற்றிய பின்னர், அலாகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றேன். ஆனால் ஓய்வூதியத்தை கணக்கிடும்போது எனது மாவட்ட நீதித்துறை சேவையை அதிகாரிகள் கருத்தில் கொள்ள மறுத்துவிட்டனர் என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு இன்று வழங்கிய தீர்ப்பில், ‘‘இந்த ஓய்வூதியம் தொடர்பான விவகாரத்தில் நாங்கள் சட்டப்பிரிவு 220ஐ முழுமையாக ஆராய்ந்தோம். நீதித்துறையின் சுதந்திரத்திற்காக சம்பளத்துடன் இறுதி சலுகைகள் வழங்கப்பட வேண்டும். அனைத்து உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கும் எப்போது பணியில் சேர்ந்தார்கள் என்பதை பொருட்படுத்தாமல், முழு ஓய்வூதியம் பெற அவர்களுக்கு உரிமை உண்டு. கூடுதல் நீதிபதிகளாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளும் முழு ஓய்வூதியத்தை பெற தகுதியானவர்கள் ஆவர். குறிப்பாக நீதிபதிகளுக்கும், கூடுதல் நீதிபதிகளுக்கும் எந்தவொரு வேறுபாடும் நிலைமையை மோசமாக்கிவிடும் என்று உச்ச நீதிமன்றம் கருதுகிறது.

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வழங்கப்படும் ரூ.15லட்சம் என்ற முழு ஓய்வுதியத்தை ஒன்றிய அரசு செலுத்தும். உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் கூடுதல் நீதிபதிகளுக்கு வழங்கப்படும் ரூ.13.6லட்சம் என்பதையும் ஒன்றிய அரசு செலுத்தும். அதேப்போல் வழக்கறிஞர் அல்லது மாவட்ட நீதித்துறை எதுவாக இருந்தாலும், அவர்களுக்கும் முழு ஓய்வூதியம் கிடைக்கப்படும். மேலும் நீதிபதிகள் குடும்பத்தினர் மற்றும் கூடுதல் நீதிபதிகள் குடும்பத்தினர் இருவருக்கும் குடும்ப ஓய்வூதியம் மற்றும் விதவை சலுகைகள் முழுமையாக வழங்கப்படும். குறிப்பாக நீதிபதிகளுக்கும் \\” ஒரு பதவி, ஒரு ஓய்வூதிய திட்டம்\\” என்பது அமல்படுத்தப்படும். அதுசார்ந்த நடவடிக்கைகள் விரைவாக தொடங்கப்படும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

The post ஓய்வுபெற்ற அனைத்து நீதிபதிகளும் ஒரே மாதிரியான ஓய்வூதியம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,High Court ,Dinakaran ,
× RELATED பலாத்கார வழக்கு: நீதிமன்றத்தின் மீதான...