×

இதுதொடர்பாக விவாதிக்க வேண்டும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிவில் சர்வீஸ் தேர்வு எதற்கு?

*பெண் ஐஏஎஸ் அதிகாரி எக்ஸ் தள பதிவால் சர்ச்சை

திருமலை : மாற்றுத்திறனாளிகளுக்கு சிவில் சர்வீஸ் தேர்வு எதற்கு?. இதுதொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று தெலங்கானா மூத்த பெண் ஐஏஎஸ் அதிகாரி எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சமீதா சபர்வால் தெலங்கானா மாநிலத்தின் 2001 ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார்.
தெலங்கானா மாநிலத்தில் சந்திரசேகர் ராவ் ஆட்சியில் முதல்வர் அலுவலக செயலாளராக இருந்த சமிதா சபர்வால் தனது பணியில் சிறப்பாக இருப்பதுடன் சமூக வளைதள பதிவுகளில் ஆக்டிவாக செயல்படுபவர்.

தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் ரேவந்த் ரெட்டியை மரியாதை நிமித்தமாக கூட நேரில் சந்திக்கவில்லை. இருப்பினும் அவர் தெலங்கானா மாநில நிதி ஆணையத்தில் செயலாளராக பணியில் உள்ளார். இவர் சமீபத்தில் மாற்றுத்திறனாளிகள் குறித்து எக்ஸ் தளத்தில், ‘எந்த ஒரு விமான நிறுவனத்திலும் மாற்றுத்திறனாளிகளை எடுக்கமாட்டார்கள். அதேபோல் அறுவை சிகிச்சை மருத்துவர்களாக மாற்றுத்திறனாளிகள் எடுக்கப்படுவதில்லை. அவ்வாறு இருக்கும் நிலையில் எப்போதும் நேரம் காலம் இல்லாமல் மக்களோட இருந்து நேரடி களப்பணியில் ஈடுபடக்கூடிய ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளாக மாற்றுத்திறனாளிகளை நியமிக்கப்படுவது சரிதானா என்பது குறித்து விவாதம் நடத்த வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு சிவில் சர்வீஸ் தேர்வு எதற்கு? இதுகுறித்து விவாதிக்க வேண்டும்’ என பதிவு செய்திருந்தார். கடந்த 21ம் தேதி செய்யப்பட்டிருந்த இந்த பதிவு மாற்றுத்திறனாளிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு பல காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்க கோரி மாற்றுத்திறனாளிகள் புகார் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் தெலங்கானாவில் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள இப்ராஹிம்பட்டினம் காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் புகார் அளித்தனர். இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் உரிமை போராட்ட குழு மாநில தலைவர் ஜங்கையா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘மூத்த ஐஏஎஸ் அதிகாரி சமிதா சபர்வாலின் கருத்து மாற்றுத்திறனாளி சமூகத்தை அவமரியாதை செய்யும் வகையில் உள்ளது. இதற்கிடையே மாற்றத்திறனாளிகள் குறித்து சமீதா சபர்வால் கருத்துகள் மீது தேசிய மனித உரிமைகள் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான தேசிய தளமும் சமீதா சபர்வாலின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது’ என்றார்.

The post இதுதொடர்பாக விவாதிக்க வேண்டும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிவில் சர்வீஸ் தேர்வு எதற்கு? appeared first on Dinakaran.

Tags : IAS ,Tirumala ,Telangana ,
× RELATED இளம்பெண்களை பலாத்காரம் செய்த ஆசாமி...