ஊரப்பாக்கம் அருகே ரூ.80 லட்சம் மதிப்பு அரசு நிலம் மீட்பு: தாசில்தார் அதிரடி

கூடுவாஞ்சேரி: ஊரப்பாக்கம் அருகே காரணைப்புதுச்சேரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு ரூ.80 லட்சம் மதிப்பிலான அரசு நிலம் மீட்கப்பட்டது. காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், ஊரப்பாக்கம் அடுத்த காரணைப்புதுச்சேரி ஊராட்சியில், காரணைப்புதுச்சேரி, கோகுலம் காலனி, கோகுலம் காலனி விரிவு, விநாயகபுரம், காட்டூர், அண்ணா நகர், மைலிமா நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த ஊராட்சிக்கு உட்பட்ட காரணைப்புதுச்சேரி கிராமத்தில் உள்ள சுடுகாடு அருகே அரசுக்கு சொந்தமான சர்வே எண் 399/1-ல் 10 சென்ட் கொண்ட மேய்க்கால் புறம்போக்கு நிலத்தையும், வனத்துறைக்கு சொந்தமான சர்வே எண் 387/1-ல் 5 சென்ட் நிலத்தையும் சிலர் ஆக்கிரமிப்பு செய்தனர்.

அங்கு பென்சிங் கற்கள் நடப்பட்டு அதில் சிமென்ட் கற்களால் வீடு கட்டுப்பட்டுள்ளதாக கலெக்டர் மற்றும் வண்டலூர் தாசில்தார் ஆகியோருக்கு பொதுமக்கள் தொடர்ந்து புகார் கூறி வந்தனர். இதையடுத்து, வண்டலூர் தாசில்தார் பாலாஜி தலைமையில், மண்டல துணை வட்டாட்சியர் புஷ்பராணி, கூடுவாஞ்சேரி வருவாய் ஆய்வாளர் அனிதாபீவி, காரணைப்புதுச்சேரி கிராம நிர்வாக அலுவலர் சிவசங்கரன் மற்றும் ஊழியர்கள் நேற்று பொக்லைன் இயந்திரத்தை எடுத்து வந்து அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அதில் பென்சிங் கற்கள் மற்றும் சிமென்ட் கற்களால் கட்டப்பட்டிருந்த வீடுகளை அதிரடியாக இடித்து தள்ளி அரசு நிலங்களை மீட்டனர். மேலும் மீட்கப்பட்ட அரசு நிலங்களின் மதிப்பு ரூ.80 லட்சம் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் கூறினர்.

The post ஊரப்பாக்கம் அருகே ரூ.80 லட்சம் மதிப்பு அரசு நிலம் மீட்பு: தாசில்தார் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: