கூட்டணியில் இருந்ததால்தான் மக்களுக்கு தெரிந்தது அதிமுகவால்தான் பாஜவுக்கு அடையாளம்: ஈவிகேஎஸ்.இளங்கோவன் தடாலடி

மதுரை: தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தல் முடிவுகளுக்கு பின்பும் மோடி தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. ஒரு நடிகரை போலத்தான் அவரின், நடை, உடை பாவனை உள்ளது. அரசியல் சாசனத்தை முத்தமிட்டு, சிறந்த வேஷம் போடுகிறார். அவருக்கு ஆதரவு தரும் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் விரைவில் கூட்டணியை விட்டு வெளியேறுவர்.

கடந்த காலங்களை போல் இஷ்டத்திற்கு செயல்பட்டால் மக்கள் அவரை தூக்கி எறிவர். அண்ணாமலை, தமிழிசை பேச்சிலும் மாற்றம் வர வேண்டும். அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக தமிழிசை ஒன்றிய அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு, கவர்னர் பதவியை இழந்துள்ளார். வார்டு கவுன்சிலராக கூட வெற்றி பெற முடியாத அண்ணாமலை, கோவையை கைப்பற்றப்போவதாக கூறி படுதோல்வியடைந்துள்ளார்.

அதிமுகவுடன் சில காலம் கூட்டணியில் இருந்ததால் தான், பாஜ கட்சி இருப்பதே மக்களுக்கு தெரிந்தது. பாஜ எப்போதும் நாணயமான கட்சியாக இருந்தது இல்லை. மக்கள் நல்ல பாடம் புகட்டியுள்ளனர். தமிழிசை, முருகன் காலத்தில் இருந்ததைவிட, அண்ணாமலை காலத்தில் பாஜ வலுவிழந்துள்ளது. அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள் அக்கட்சியே காணாமல் போய்விடும். மோடி மூன்றாவது முறையாக பதவியேற்றது மக்களுக்கு ஏற்பட்ட வேதனை தான். இந்த வேதனை சீக்கிரம் தீரும். இவ்வாறு தெரிவித்தார்.

The post கூட்டணியில் இருந்ததால்தான் மக்களுக்கு தெரிந்தது அதிமுகவால்தான் பாஜவுக்கு அடையாளம்: ஈவிகேஎஸ்.இளங்கோவன் தடாலடி appeared first on Dinakaran.

Related Stories: