ராணிப்பேட்டை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மழை வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள 49 மையங்கள் அமைப்பு

*ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் தகவல்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி மழை வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள 49 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் எதிர் வரும் வடகிழக்கு பருவமழை – 2023 வெள்ள தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஆயத்த பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.

மாவட்ட எஸ்.பி கிரண் ஸ்ருதி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் கலெக்டர் வளர்மதி கூறியதாவது:ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் அரக்கோணம்-9, ஆற்காடு -6, கலவை- 3 நெமிலி-18, சோளிங்கர்-3, வாலாஜா-7 ஆக மொத்தமாக 47 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் முதல் தகவல் அளிப்பவர்கள் பெண்கள் 132, ஆண்கள் 1,627 என மொத்தமாக 1,759 நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் மழை வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள அரக்கோணம் 9, ஆற்காடு 6, கலவை 3, நெமிலி 17, சோளிங்கர் 7, வாலாஜா 7 என மொத்தமாக 49 இடங்களில் 49 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் பேரிடர் பாதிப்புகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க 1077 என கட்டணமில்லா எண்ணுக்கும், தொலைபேசி எண் 04172-271766க்கும் தொடர்பு கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும் பொருட்டு, குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ளுதல், அனைத்து இடங்களில் உள்ள மழைநீர் வடிகால்களின் அடைப்புகளை சரிசெய்தல் வேண்டும், மிகவும் பாதிப்படைந்த பகுதிகளை சீரமைக்கும் பணிகளை உடனடியாக செயல்படுத்துதல் வேண்டும், ஏரி, குளங்களின் கரைகளை வலுப்படுத்துதல் வேண்டும். நீர் நிலைகளை தூர்வாரும் பணிகளை துரிதமாக செயல்படுத்துதல் வேண்டும்.

அனைத்து நீர்நிலைகளை உடனுக்குடன் ஆய்வு மேற்கொண்டு, குப்பைகளை மற்றும் அடைப்புகளை சீர் செய்து குறுகியகால தணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும். ஒவ்வொரு நகரத்திற்கும், நகர வெள்ள மேலாண்மை திட்டம் தயார் செய்து, நிலையான வழிமுறைகளை வகுத்தல் வேண்டும். வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் இயந்திர நீர் இறைப்பான்கள் மூலம் வெள்ளநீரை உடனுக்குடன் வெளியேற்ற தயார் நிலையில் வைத்தல் வேண்டும்.

நீர் நிலைகளின் நீர்மட்டத்தை கண்காணித்து தேவைப்படின், அவசரகாலத்திற்கு ஏற்ப வெள்ளநீர் வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்வதற்காக, வல்லுநர் குழு அமைத்தல் வேண்டும். மழைக்காலங்களில் சாலைகளில் விழும் மரங்களை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். பாதிப்புகள் குறித்து, பொதுமக்கள் அறிய சமூக வலைதளங்கள் மூலம் உடனடியாக தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும்.

பேரிடர்காலங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஒன்றிணைத்து செயல்படுத்துதல் வேண்டும். பொதுமக்களுக்கு பேரிடர் தொடர்பான பயிற்சி அளித்தல், பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கைப்பேசி செயலி மூலம் இணைந்து, பேரிடர் மீட்புபணிகளை செயல்படுத்த பயிற்சி அளித்தல் வேண்டும்.

பாதிப்புக்குள்ளாகும் பகுதியிலுள்ள மக்களை சமுதாய கூடங்களில் தங்க வைக்கவும், நிவாரண மையங்களில் தரமான உணவு, மருத்துவ வசதி வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும். பேரிடர் மீட்புபணிகளில் இளைஞர்கள், தன்னார்வலர்கள் இணைந்து பணியாற்ற பயிற்சி அளித்தல் வேண்டும். பேரிடர் காலங்களில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கையேடுகள், குறும்படங்கள் மற்றும் ஒலி, ஒளிபதிவுகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளிக் கட்டிடங்களில் உள்ள மேற்கூரைகளில் மழைநீர் தேங்கா வண்ணம் அவ்வப்போது கவனித்து ஏதேனும் அடைப்புகள் இருந்தால் அதனை சரிசெய்யும் படி அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும், மேலும் நியாய விலைக் கடைகள் ஏதேனும் பழதடைந்துள்ளதா என்பதையும், மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் கிடைப்பதை உறுதி செய்திடவும், வடகிழக்கு பருவமழைகாலத்தில் பொருட்சேதம் மற்றும் உயிர்சேதம் ஏற்படாமல் தவிர்க்கவும், குறைக்கவும், அனைத்து சார்நிலை அலவலர்களும்ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்று பொதுப்பணித்துறை அலுவலர்கள் அனைத்து வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலவலர்கள், தீயனைப்பு மற்றும் காவல்துறை, மருத்துவத்துறை, கால்நடைத்துறை, வேளாண்மைத்துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி உத்ததிரவிட்டார்.

இக்கூட்டத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முரளி, கோட்டாட்சியர்கள் வினோத்குமார்(ராணிப்பேட்டை) பாத்திமா(அரக்கோணம்) அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளின் வரைபடம் தயாரிக்க வேண்டும்

ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், ‘பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளின் வரைபடம் கட்டாயம் தயார் செய்தல் வேண்டும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும். களப்பணியாளர்களுக்கு பேரிடர்மேலாண்மை தொடர்பான பயிற்சிகள் அளித்தல் வேண்டும்.
பாதிப்புக்குள்ளாகும் பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றும்போது, முதியோர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் முன்னுரிமை அளித்திட தன்னார்வலர்கள் மற்றும் மீட்பு குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்படுதல் வேண்டும்.

பாதிப்புக்குள்ளாகும் பகுதியில் உள்ள கால்நடைகளை விடுபடாமல் பாதுகாப்பான தங்குமிடங்களுக்கு எடுத்துச் செல்லும் வகையிலான திட்டங்கள், பயிற்சிகளின் போது வழங்கப்படுதல் வேண்டும். நிவாரண மையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பொருட்களை மக்களுக்கு வழங்குதல் ஆகியவை கண்காணிக்கப்படுதல் வேண்டும்’ என்றார்.

தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்க உத்தரவு

ஒவ்வொரு நகரத்திலும், தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும். பேரிடர்காலங்களில், முன்னெச்சரிக்கை தகவல்களை பொதுமக்களுக்கு விரைந்து அளிக்கவேண்டும். மீட்புக் குழுக்கள் குறுகியகால அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்றடைய ஏதுவாக, எந்நேரத்திலும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.

The post ராணிப்பேட்டை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மழை வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள 49 மையங்கள் அமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: