ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க சென்று கைதான தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கை அரசின் புதிய கடல் தொழில் மீன்பிடி சட்டத்தின் கீழ் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து 3 பேரும் இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மூன்று மீனவர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசை வலியுறுத்தியும், இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கையை கண்டித்தும் ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், புதுகை மாவட்ட மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கினர்.
நேற்று, ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு மீனவர்கள் பேரணியாக சென்று மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர். ராமேஸ்வரம் கடற்கரை துறைமுகத்தில் துவங்கிய பேரணி பாம்பன் அக்காள்மடம் சென்றடைந்தது. அங்குள்ள பாம்பன் ஊராட்சி அலுவலகத்தில் ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமையில் மீனவர் பிரதிநிதிகள், அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இதில், மீனவர்களை விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கலெக்டர் உறுதியளித்ததை தொடர்ந்து பேரணி நிறுத்தப்பட்டு, அனைவரும் கலைந்து சென்றனர்.
கலெக்டர் விஷ்ணு சந்திரன் கூறுகையில், ‘‘6 மாதம், 18 மாதம், 2 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. 150க்கும் மேற்பட்ட படகுகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தார். மீனவர் சங்க பிரதிநிதி சகாயம் கூறுகையில், ‘‘கலெக்டரின் உத்தரவாதத்தை தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கிறோம். 22ம் தேதிக்குள் எங்களது கோரிக்கைப்படி மீனவர்கள் விடுவிக்கப்படா விட்டால் எங்களது போராட்டம் தொடரும். கச்சத்தீவு திருவிழாவையும் புறக்கணிப்போம். நாட்டுப்படகு மீனவர்களும் கச்சத்தீவு செல்லாமல் ஆதரவு தருவார்கள்’’ என்றார்.
The post இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் பேரணி: கலெக்டர் உத்தரவாதத்தால் போராட்டம் தற்காலிக வாபஸ் appeared first on Dinakaran.