சட்டவிரோத பணப்பரிமாற்ற விவகாரம் தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 7 இடங்களில் இரண்டாவது நாளாக சோதனை

சென்னை: தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 7 இடங்களில் இரண்டாவது நாளாக நேற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் பங்கு பத்திரங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. கோவையை சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டின், லாட்டரி சீட்டுகள் அச்சடித்து விற்பனை செய்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனை தொடர்ந்து சிக்கிம் மாநில அரசு அளித்த புகாரின்படி, சிபிஐ விசாரணை நடத்தியதில், கடந்த 2009ம் முதல் 2010ம் ஆண்டு காலக்கட்டத்தில் லாட்டரி சீட்டு விற்பனையில் முறைகேடாக ரூ.910 கோடி சம்பாதித்து, அதை 40 நிறுவனங்கள் மீது முதலீடு செய்தது தெரியவந்தது.

இதைதொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு தொழிலதிபர் மார்ட்டின் மீது லாட்டரி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. வெளிநாடுகளில் சட்டவிரோத பண பரிமாற்றம் செய்யப்பட்டிருந்ததால், அமலாக்கத்துறை தனியாக தொழிலதிபர் மார்ட்டின் மீது சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவருக்கு சொந்தமான ரூ.630 கோடி சொத்துகளை முடக்கியுள்ளது. இந்நிலையில் கேரளாவில் லாட்டரி விற்பனையில் பல கோடி ரூபாய் அம்மாநில அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்படி கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 30 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான கோவை வெள்ளக்கிணறு காந்திபுரத்தில் உள்ள வீடு, கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கவுண்டர் மில்ஸ் (ஜிஎன் மில்ஸ்) அதே பகுதியில் உள்ள ஓமியோபதி கல்லூரி மற்றும் மருத்துவமனை, காந்திபுரம் 6வது வீதியில் உள்ள லாட்டரி அலுவலகம் என 4 இடங்கள் மற்றும் சென்னை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜூன் அலுவலகம், வீடு மற்றும் திருவல்லிக்கேணியில் உள்ள எஸ்.எஸ்.மியூசிக் தலைமை அலுவலகம், ஆயிரம் விளக்கு காதர் நவாஸ்கான் சாலையில் உள்ள மார்ட்டின் மகன் வீடு என 3 இடங்கள் என மொத்தம் 7 இடங்களில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் 2வது நாளாக நேற்று நள்ளிரவு வரை சோதனை நடத்தினர்.

2 நாட்களாக வரும் சோதனையில், லாட்டரி மூலம் வந்த வருமானத்தை நாடு முழுவதிலும் ஆசையா சொத்துகள் வாங்கி குவித்து வைத்திருந்த ஆவணங்கள், மருமகன் ஆதவ் அர்ஜூன் நடத்தும் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் சட்டவிரோதமாக முதலீடு செய்த ஆவணங்கள், வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களின் பங்குகளை வாங்கி பத்திரங்கள் என பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றியதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. இந்த சோதனை முடிவிற்கு பிறகு தான் தொழிலதிபர் மார்ட்டின், லாட்டரி மூலம் எத்தனை நூறு கோடி முறைகேடாக சம்பாதித்துள்ளார் என்ற விவரம் முழுமையாக தெரியவரும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சட்டவிரோத பணப்பரிமாற்ற விவகாரம் தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 7 இடங்களில் இரண்டாவது நாளாக சோதனை appeared first on Dinakaran.

Related Stories: