×

சரித்திர பதிவேடு ரவுடிகள்: புளியந்தோப்பு சரகத்தில் முன்பகை காரணமாக ஏற்படும் கொலைகள்


சென்னையிலேயே அதிக சரித்திர பதிவேடு ரவுடிகள் கொண்ட புளியந்தோப்பு சரகத்தில் முன்பகை காரணமாக ஏற்படும் கொலைகளை சில மாற்றங்களை செய்தால் தடுக்கலாம் என போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சென்னை போன்ற பெருநகரங்களில் எந்த அளவிற்கு வசதி வாய்ப்புகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளனவோ அந்த அளவிற்கு குற்ற சம்பவங்களும் உள்ளன. குறிப்பாக வடசென்னை பகுதியில் பல ரவுடிகள் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தனர். இன்றளவும் தொன்று தொட்டு ரவுடி கும்பலுக்குள் கோஷ்டி மோதல் ஏற்பட்டு ஒரு தரப்பினரை இன்னொரு தரப்பினர் வெட்டிக் கொள்ளும் சம்பவங்களும் முன்விரோதம் காரணமாக நடைபெறும் கொலைகளும் தொடர்ந்து வருகின்றன. வடசென்னையில் பல ரவுடிகள் குழுக்களாக செயல்பட்டு தங்களது அதிகாரம் மூலம் பல விஷயங்களை சாதித்து வந்தனர். அதன் பிறகு பலர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். சிலர் ரவுடி தொழிலில் இருந்து ஒதுங்கி விட்டனர்.

சென்னையிலேயே அதிக சரித்திர பதிவேடு ரவுடிகள் கொண்ட காவல் மாவட்டம் புளியந்தோப்பு காவல் மாவட்டம் தான். இந்த காவல் மாவட்டத்தில் மொத்தம் 720 சரித்திர பதிவேடு ரவுடிகள் உள்ளனர். இதில் 652 பேர் தற்போதும் ஆக்டிவ்வாக உள்ளனர். இந்த காவல் மாவட்டத்தில் குறைந்தபட்சம் 923 போலீசார் பணியில் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 700 போலீசார் மட்டுமே உள்ளனர். அதிலும் அயல் பணி மற்றும் விடுப்பு காரணமாக 150 பேர் தினமும் வெளியே சென்று விடுகின்றனர். மீதி 550 போலீசாரை வைத்து 652 ரவுடிகளை உள்ளடக்கிய புளியந்தோப்பு காவல் மாவட்டத்தை கண்காணிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. புளியந்தோப்பு காவல் மாவட்டம் என்றாலே பல போலீசார் ஒதுங்கி கொள்கின்றனர். மீறி அவர்களை இங்கு போட்டாலும் யாரையாவது பிடித்து வேறு காவல் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்று விடுகின்றனர். ஏனென்றால் வேலை பளு அதிகம், வருமானமும் குறைவு என்பதால் பெரும்பாலான போலீசார் புளியந்தோப்பு காவல் மாவட்டத்தை புறக்கணிக்கின்றனர். இதனால் எப்போதும் காவலர்கள் பற்றாக்குறையுடன் இந்த காவல் மாவட்டம் இயங்கி வருகிறது.

புளியந்தோப்பு காவல் மாவட்டத்தை பொருத்தவரை பல ரவுடிகள் பிரபலமாக இருந்து வந்துள்ளனர். குறிப்பாக வியாசர்பாடி பகுதியில் நாகேந்திரன் என்பவர் பிரபலமாக இருந்தார். ஸ்டான்லி சண்முகம் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று தற்போது அவர் சிறையில் உள்ளார். இதேபோன்று வியாசர்பாடி பி.வி காலனியை சேர்ந்த அப்பு அதன் பிறகு சில காலம் புளியந்தோப்பு மற்றும் வட சென்னையை கலக்கி வந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டு அவரும் இறந்து விட்டார். வெள்ளை ரவி எனும் ரவுடி என்கவுண்டரில் கொல்லப்பட்டார். காதுகுத்து ரவி. சேரா. சோமு. கரிமேடு அன்பு ஆகியோர் ஒதுங்கிக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து இடிமுரசு இளங்கோ என்னும் ரவுடி மற்றொரு ரவுடி கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அதன் பின்பு பப்லு என்னும் ரவுடியை ஆந்திராவில் வைத்து எதிர் தரப்பினர் தீர்த்துக் கட்டினர்.

பொக்கை ரவி மருத்துவமனையில் ரவுடிகளால் தீர்த்து கட்டப்பட்டார். புளியந்தோப்பு சரித்திர பதிவேடு ரவுடியான ஆற்காடு சுரேஷை சென்ற வருடம் பட்டினம் பாக்கத்தில் வைத்து கூலிப்படையினர் கொலை செய்தனர். இதேபோன்று வியாசர்பாடி பி.வி காலனியை சேர்ந்த முத்து சரவணன் என்பவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெங்கல் பகுதியில் வைத்து என்கவுண்டர் செய்தனர். இவ்வாறு வடசென்னை மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்திய ரவுடிகள் பெரும்பாலும் புளியந்தோப்பு சரகத்தை சேர்ந்தவர்களே. இன்னும் பல ரவுடிகளை தொடர்ந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். இவ்வளவு ரவுடி கும்பல்கள் இருந்தாலும் போலீசார் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் நடக்காமல் ஓரளவிற்கு பார்த்து வந்தனர். ரவுடி கும்பல்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகளையும் கண்காணித்து வந்தனர். இருந்த போதிலும் கடந்த ஐந்தாம் தேதி செம்பியம் காவல் நிலையத்திறகு உட்பட்ட பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழி வாங்கவே இவர் கொலை செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புளியந்தோப்பு காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் இன்ஸ்பெக்டர் தனிப்பிரிவு அல்லது உதவி கமிஷனரின் தனிப்பிரிவு உள்ளிட்ட ஸ்பெஷல் டீம் இயங்கி வந்தது. இவர்கள் ஆக்டிவாக உள்ள ரவுடிகளை கண்காணித்து அவர்கள் ஏரியாவுக்குள் வரும்போது அவர்களை கைது செய்து வந்தனர். இதனால் கடந்த காலங்களில் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருந்தது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறிப்பிட்ட ஸ்பெஷல் டீம் மற்றும் ஆக்டிவாக செயல்பட்ட போலீசார் பலர் புளியந்தோப்பு சரகத்தில் இருந்து மாற்றம் செய்யப்பட்டனர். குறிப்பாக எம்கேபி நகர் காவல் நிலையத்தில் உதவி கமிஷனர் பிரிவில் இருந்த கவியரசன். காவலர் பிரபு. பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் பணிபுரிந்த இருந்த சசி. புளியந்தோப்பில் இருந்த குமரேசன் செம்பியம் பகுதியில் இருந்த அய்யனார் குப்புசாமி. உள்ளிட்டோர் இந்த காவல் மாவட்டத்தில் இருந்து மாற்றப்பட்டனர்.

இதே போன்று உதவி ஆய்வாளராக இருந்த ரவிச்சந்திரன் நுண்ணறிவு பிரிவிற்கும் குற்ற செயல்கள் அதிகமாக நடக்கும் எம் கே பி நகர் காவல் நிலையத்தில் இருந்த சசிகுமார் துணை ஆணையர் அலுவலகத்திற்கும் மாற்றப்பட்டனர். இவ்வாறு காவல் மாவட்டத்தை பற்றி நன்கு தெரிந்த ரவுடிகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்த போலீசார் அனைவரும் ஒன்றன்பின் ஒன்றாக மாற்றப்பட்டதால் தற்போது புளியந்தோப்பு சரகத்தில் ரவுடிகளை பின்தொடர்ந்து கண்காணிக்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் 6 இன்ஸ்பெக்டர்கள் பணியிடம் காலியாக உள்ளது. இது குறித்து புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் பல ஆண்டுகள் பணிபுரிந்து வரும் காவலர் ஒருவர் கூறுகையில் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே புளியந்தோப்பு காவல் மாவட்டம் என்றால் தவறு செய்த போலீசார் மாற்றலாகி வரும் காவல் மாவட்டம் என்றாகிவிட்டது.

ஆனால் இந்த காவல் மாவட்டத்தில் புதியவர்கள் வந்து பணி செய்வது அவ்வளவு எளிய காரியம் இல்லை. குறைந்தபட்சம் இந்த காவல் மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளாவது பணிபுரிந்த காவலர்கள் உதவி ஆய்வாளர்களால் மட்டுமே ரவுடிகளின் நடமாட்டம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் எளிதாக அறிந்து கொள்ள முடியும். தற்போது இந்த காவல் மாவட்டத்தில் பணிபுரிந்த பலர் வெளியே சென்று விட்டதாக தெரிகிறது. இதனால் குற்ற செயல்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. சென்னை போன்ற பெரு நகரங்களில் அதிக குற்ற செயல்கள் நடைபெறும் மாவட்டம் புளியந்தோப்பு காவல் மாவட்டம் இந்த காவல் மாவட்டத்தில் எட்டு காவல் நிலையங்கள் மற்றும் மூன்று மகளிர் காவல் நிலையங்கள் வருகின்றன. இவ்வளவு பெரிய சென்னையில் தகுதி வாய்ந்த எட்டு இன்ஸ்பெக்டர்களை நியமனம் செய்வது முடியாத காரியமா கண்டிப்பாக முடியும்.

ஆனால் அவர்கள் வந்து வேலை செய்வதற்கு தயாராக இல்லை இதனாலையே இந்த காவல் மாவட்டத்தை ஒரு புறக்கணிக்கபட்ட காவல் மாவட்டமாக அனைவரும் பார்க்கின்றனர் மேலும் காவலர்கள் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவில் உள்ளதால் வேலை பளு மிகவும் அதிகமாக உள்ளது. இவற்றை களைய அதிக காவலர்களை இங்கு பணியில் அமர்த்த வேண்டும். மேலும் தகுதி வாய்ந்த இன்ஸ்பெக்டர்களை நியமனம் செய்ய வேண்டும் ஒரே காவல் மாவட்டத்தில் அளவுக்கு அதிகமான சரித்திர பதிவேடு ரவுடிகள் உள்ளதால் அவர்களை கண்காணிக்க துணை ஆணையர் அலுவலகத்தில் தனியாக ரவுடிகள் நுண்ணறிவு பிரிவு ஏற்படுத்தப்பட்டு உதவி ஆய்வாளர் ஒருவர் தலைமையில் அது இயங்கி வந்தால் தொடர்ந்து ரவுடிகளின் நடமாட்டத்தை எளிதாக கண்காணிக்க முடியும். சமீபத்தில் பேசின் பிரிட்ஜ் பகுதியில் மேளம் அடிக்கும் தொழிலாளி முருகன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

முன்விரோதம் காரணமாக வேல்முருகன் என்பவர் தனது ஆட்களை வைத்து இந்த கொலையை செய்தது தெரிய வந்தது. இதேபோல ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளது தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதே போன்று 5 நாட்களுக்கு முன்னர் செம்பியம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே ஒரு கொலை நிகழ்ந்திருக்க வேண்டியது. ஆனால் கொலைகாரர்கள் தேடி வந்த நபர் இல்லை என்பதால் அந்த கொலை நிகழவில்லை. இதுவும் முன்விரோதம் காரணமாக நிகழ்ந்த சம்பவம். இதேபோன்று பேசின் பிரிட்ஜ் பகுதியிலும் முன்விரோதம் காரணமாக சில விரும்பத் தகாத சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே போலீசார் தொடர் கண்காணிப்பை தொடர்ந்தால் மட்டுமே குற்ற செயல்கள் அதிகம் நடைபெறும் புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற முடியும். இதற்கு காவல் மாவட்டத்தில் பணிபுரிந்த பழைய ஆட்களும் அதே நேரத்தில் துடிப்புடன் செயலாற்றும் புதிய சப்-இன்ஸ்பெக்டர்களும் தகுதி வாய்ந்த இன்ஸ்பெக்டர்களும் வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது என தெரிவித்தார்.

இரவு நேர கஸ்டடி
சமீப காலமாக காவல் நிலையத்தில் ரவுடிகள் மற்றும் குற்ற செயலில் ஈடுபடுபவர்களை வைப்பது கிடையாது. கொடுங்கையூர் மற்றும் தலைமைச் செயலக காலனி பகுதியில் வைக்கப்பட்ட விசாரணை கைதிகள் உயிரிழந்த காரணத்தினால் தொடர்ந்து இந்த நடைமுறை இருந்து வருகிறது. ஆனால் இரவு கஸ்டடி இல்லாமல் குற்ற பின்னணி உடையவர்களை கையாள்வது மிகவும் கடினம். அவசர அவசரமாக அவர்கள் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்து நீதிமன்றத்தின் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கின்றனர். மீண்டும் அவர்களை விசாரணைக்கு எடுக்கும்போது அவர்களை எந்த ஒரு துன்புறுத்தலும் இல்லாமல் அனுப்பி வைக்க வேண்டும்.

இதனால் தற்பொழுது ரவுடிகள் மிகவும் ஜாலியாக உள்ளனர். மேலும் பாத்ரூமில் வழுக்கி விழும் சம்பவங்களும் குறைந்துவிட்டன. இதனால் சமீப காலமாக வடசென்னை பகுதியில் ரவுடியிசம் அதிகரித்து விட்டது. எனவே போலீஸ் உயர் அதிகாரிகள் மீண்டும் பழைய நிகழ்வுகளை கொண்டு வந்தால் மட்டுமே ரவுடியிசத்தை கட்டுப்படுத்த முடியும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். சட்டம் ஒழுங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் போலீஸ் கமிஷனர் அருண் பதவி ஏற்ற பிறகு ரவுடிகள் சென்னையை காலி செய்து வந்தாலும், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் குற்றங்களில் ஈடுபடலாம். இதனால் போலீசார் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வடசென்னையில் குற்றவாளிகள் இல்லாத நிலையை உருவாக்க முடியும் என்கின்றனர் பொதுமக்கள்.

The post சரித்திர பதிவேடு ரவுடிகள்: புளியந்தோப்பு சரகத்தில் முன்பகை காரணமாக ஏற்படும் கொலைகள் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Saragah ,
× RELATED வீடுகள் முன்பு நோ பார்க்கிங் போர்டு வைக்க தடை