புதுச்சேரி: புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரிய மார்க்கெட்டில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. அவர்களுக்கு ஆதரவாக இந்தியா கூட்டணி கட்சியினரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் பழமையான பெரிய மார்க்கெட்டில் 2000க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. காய்கறிகள், பழங்கள், மல்லிகை பொருட்கள் மற்றும் மீன்கள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. சுமார் 5 ஆயிரம் வியாபாரிகள் இங்கு வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 35 கோடி ரூபாய் செலவில் பெரிய மார்க்கெட்டை முழுமையாக அகற்றிவிட்டு புதிய மார்க்கெட்டை கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளும் தொடங்கியுள்ளன. அரசின் முடிவுக்கு வியாபாரிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பெரிய மார்க்கெட் வியாபாரிகள் இன்று கடையடைப்பில் ஈடுபட்டனர். தற்போது உள்ள மார்க்கெட்டை சீரமைத்து தந்தாலே போதுமானது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
நேரு வீதி, காந்தி வீதி, பாரதி வீதி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டன. இதற்கு திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள்,கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது. அக்கட்சிகளை சேர்ந்தவர்கள் காமராஜர் சிலையிலிருந்து பேரணியாக சென்றனர். இதில் வியாபாரிகளும் பங்கேற்றனர். பேரணியாக சென்று 100க்கும் மேற்பட்டோர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் சிவா முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றநிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
The post புதுச்சேரி பெரிய மார்க்கெட்டை இடிக்க வியாபாரிகள் எதிர்ப்பு: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை எதிர்த்து கடை அடைப்பு போராட்டம் appeared first on Dinakaran.