ஜஹாஸ்பூர்: நாட்டின் அனைத்து செல்வங்களையும் பெரிய தொழிலதிபர் நண்பர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே பாஜகவின் கொள்கை என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் 23ம் தேதி தேர்தல் நடைபெறுவதால், நாளை மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. அதனால் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். அந்த வகையில் ஜஹாஸ்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி; மோடியின் பாஜக அரசு ‘அக்னிபாத்’ என்று ராணுவத்தில் ஒரு திட்டம் கொண்டு வந்தது. இதில் இளைஞர்கள் 4 ஆண்டுகள் ராணுவத்திற்கு சென்று, பின்பு வேலையில்லாமல் வீடு திரும்புவார்கள்.
நாட்டிற்கு சேவை செய்ய தன் உயிரையே தியாகம் செய்ய தயாராக இருக்கும் ஒரு இளைஞருக்கு, மோடி அரசால் ஒரு தகுதியான வேலை கூட கொடுக்க முடியவில்ல. காங்கிரஸின் கொள்கை என்னவெனில் – ஜனநாயகத்தில் அரசாங்கத்திடம் ஒரு ரூபாய் கூட வைத்துக் கொள்வது கிடையாது. அனைத்து சொத்துகளும் நாட்டு மக்களுக்கு சொந்தமானது. எனவே எங்கள் திட்டங்கள் அனைத்தும் உங்கள் பாக்கெட்டில் பணத்தை நிரப்புவதுதான். நாட்டின் அனைத்து செல்வங்களையும் பெரிய தொழிலதிபர் நண்பர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே பாஜகவின் கொள்கை.
அதனால்தான் பிரதமர் மோடி தனது தொழிலதிபர் நண்பர்களின் கோடிக்கணக்கான ரூபாய்களை தள்ளுபடி செய்கிறார். ஆனால் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவில்லை. என் சகோதர சகோதரிகளே… யோசித்துப் பாருங்கள்… உங்களுக்குக் கிடைத்து வரும் நிவாரணத்தை நிறுத்துவதா? அல்லது அதைத் தொடர வைப்பதா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். இன்று நீங்கள் உங்கள் உரிமைகளைப் பற்றி பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஏனென்றால், உங்கள் சொத்துக்களை மத்திய பாஜக அரசும், நரேந்திர மோடியும் அபகரிக்கிறார்கள் இவ்வாறு கூறினார்.
The post நாட்டின் அனைத்து செல்வங்களையும் பெரிய தொழிலதிபர் நண்பர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே பாஜகவின் கொள்கை: பிரியங்கா காந்தி கடும் தாக்கு appeared first on Dinakaran.