காரில் நின்று கொண்டு பயணம் பிரதமர் மோடி மீது போலீசில் புகார்: நீதிமன்றத்தை நாட முடிவு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சி, திருவனந்தபுரத்தில் காரில் நின்று கொண்டு பயணம் செய்த பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபி மற்றும் மோட்டார் வாகனத்துறையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி கடந்த 24,25 ஆகிய தேதிகளில் கேரளாவில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது கொச்சியிலும், திருவனந்தபுரத்திலும் காரின் கதவைத் திறந்து நின்றபடியே ரோட் ஷோ நடத்தினார். இது தொடர்பாக புகார்கள் எழுந்துள்ளன.

திருச்சூர் அருகே உள்ள திருவில்வாமலை என்ற பகுதியைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணன் என்பவர் இது தொடர்பாக கேரள டிஜிபி அனில்காந்த் மற்றும் மோட்டார் வாகனத் துறையிடம் புகார் அளித்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
மோட்டார் வாகன சட்டத்தின்படி கார் கதவை திறந்து வைத்து நின்று கொண்டே பயணம் செய்வது குற்றமாகும். சமீபத்தில் கொச்சி வந்த பிரதமர் மோடி கார் கதவை திறந்து வைத்து நின்றபடியே பயணம் செய்தார். டிரைவரின் கண்ணை மறைக்கும் வகையில் கார் முன்புற கண்ணாடி முழுவதும் பூக்கள் காணப்பட்டன. சட்டத்திற்கு முன்பு அனைவரும் சமமாகும். எனவே சட்டத்தை மீறிய பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஜெயகிருஷ்ணன் தன்னுடைய புகாரில் குறிப்பிட்டு உள்ளார்.

இதுகுறித்து ஜெயகிருஷ்ணன் கூறியது: நம் நாட்டில் சட்டம் அனைவருக்கும் பொதுவானதாகும். யாருக்கும் இதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது. பிரதமர் மோடி சட்டத்தை மீறி செயல்பட்டு உள்ளார். எனவே அவர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசும், மோட்டார் வாகனத் துறையும் இதில் நடவடிக்கை எடுக்க விட்டால் நீதிமன்றத்தை நாட முடிவு செய்து உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post காரில் நின்று கொண்டு பயணம் பிரதமர் மோடி மீது போலீசில் புகார்: நீதிமன்றத்தை நாட முடிவு appeared first on Dinakaran.

Related Stories: