மத்தியபிரதேசத்தின் தாமோ நகரில் நேற்று நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது, “கடந்த பேரவை தேர்தலில் சட்டீஸ்கரிலும், ராஜஸ்தானிலும் காங்கிரசிடம் ஆட்சியை மக்கள் ஒப்படைத்தனர். ஆட்சியமைத்த காங்கிரஸ் மக்கள் நலத்திட்டங்களை செய்யாமல், சூதாட்டம், கருப்பு பணம் பதுக்கல் ஆகியவற்றில் ஈடுபட்டது.
2014ம் ஆண்டு ஒன்றியத்தில் பாஜ ஆட்சி அமைத்த பிறகு உலகில் 10வது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரம் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவை ஆட்சி செய்த இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி 5வது இடத்துக்கு உயர்ந்தது. இதைக்கண்டு உலக நாடுகள் ஆச்சரியப்பட்டன. ஆனால் அதைப்பற்றி எதிர்க்கட்சியினர் பேசுவதில்லை. இலவச ரேஷன் திட்டத்தை 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தது பற்றி தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளிக்க போவதாக தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் அந்த பாவத்தை செய்யட்டும். அவர்கள் உலகின் எந்த நீதிமன்றத்துக்கு சென்றாலும் 80 கோடி மக்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் தொடர அனைத்தையும் செய்வேன். நான் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்வேன். ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன். 2024 மக்களவை தேர்தலில் நான் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தியாவை உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற்றுவேன்” என்று உறுதி அளித்தார்.
The post இந்தியாவை உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற்றுவேன்: பிரதமர் மோடி உறுதி appeared first on Dinakaran.