ஆங்கிலம் தெரியாத மாணவர்களுக்கு தாய்மொழியில் கல்வி கற்பிக்காதது பெரும் அநீதி: பிரதமர் மோடி பேச்சு

போபால்: ‘ஆங்கிலம் தெரியாத மாணவர்களுக்கு தாய்மொழியில் கல்வி கற்பிக்காமல் பெரும் அநீதி இழைக்கப்படுகிறது’ என பிரதமர் மோடி கூறி உள்ளார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அரசு பள்ளியில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது: அமிர்த காலத்தின் முதல் ஆண்டிலேயே, நாட்டின் செழிப்பு அதிகரித்து வருவதாகவும், வறுமை குறைந்து வருவதாகவும் செய்திகள் வர ஆரம்பித்துள்ளன.

கடந்த 5 ஆண்டுகளில் 13.50 கோடி பேர் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருந்து வெளியே வந்துள்ளதாக நிதி ஆயோக் அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 9 ஆண்டுகளில் இந்தியர்களின் சராசரி வருமானம் ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.13 லட்சமாக உயர்ந்துள்ளதாக வருமான வரி கணக்குகள் காட்டுகின்றன. மக்கள் குறைந்த வருமானத்தில் இருந்து உயர் வருமான பிரிவிற்கு மாறி வருகின்றனர். அனைத்து துறைகளும் வலுப்பெற்று வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருவதாக தரவுகள் காட்டுகின்றன. அரசு வசூலிக்கும் ஒவ்வொரு பைசா வரியும் நாட்டின் வளர்ச்சிக்காக செலவிடப்படும் என்ற நம்பிக்கை மக்களிடம் வந்துள்ளதால், வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

2014க்கு முன்பு ஊழல் மற்றும் மோசடிகளின் சகாப்தம் நிலவியது. ஏழைகளின் உரிமைகள், பணம் அவர்களை சென்றடைவதற்கு முன்பே கொள்ளையடிக்கப்பட்டது. ஆனால் இப்போது ஒவ்வொரு பைசாவும் நேரடியாக அவர்களின் கணக்குகளை சென்றடைகிறது. இன்று பணி நியமன கடிதங்களைப் பெறும் ஆசிரியர்கள், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுவார்கள். தேசிய கல்விக் கொள்கையில் பாரம்பரிய அறிவு மற்றும் எதிர்கால தொழில்நுட்பத்திற்கு சமமான முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் தாய்மொழியில் கல்வி வழங்குவதற்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஆங்கிலம் தெரியாத மாணவர்களுக்கு தாய்மொழியில் கல்வி கற்பிக்காததால் பெரும் அநீதி இழைக்கப்படுகிறது. எனவே தேசிய கல்விக் கொள்கை பாடத்திட்டங்களில் பிராந்திய மொழிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

The post ஆங்கிலம் தெரியாத மாணவர்களுக்கு தாய்மொழியில் கல்வி கற்பிக்காதது பெரும் அநீதி: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: